சிறுமி ஒருத்தியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரையும் அவருக்கு உடந்தையாகவிருந்த சிறுமியின் தாயையும் 14 நாள் விளக்க மறியலில் வைக்க கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் மூன்று மாத காலம் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் ஜூன் 03 ஆம் திகதி வாழைச்சேனை, ஆலங்குளம் பகுதியில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தம்புள்ளையில் சிறுமியின் தாயாரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிறுமி துஷ்பிரயோக சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இடம்பெற்றுள்ளது.
50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளம் ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார். அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார். அப்பெண்ணிற்கு 18 வயது ஆண், 14 வயதுடைய பெண் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அப்பெண் தனது 14 வயது பிள்ளையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு தன் காதலனைச் சந்திக்க நற்பிட்டிமுனை பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தபோதே சந்தேக நபர், அந்தப் பெண்ணின் மகளிடமும் அத்துமீறியுள்ளார். மகள் கூக்குரலிடவே அந்தத் தாய் சிறுமியின் வாயைப் பலவந்தமாக மூடி, அந்தக் காமுகனுக்கு ஒத்தாசை புரிந்துள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனை பொலிஸ் நிலைய தலைமையக இன்ஸ்பெக்டர் தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர்,பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்கா, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர்,பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா(44138) ,சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
