மாணவர்களின் ஆளுமை விருத்தியில் பெற்றோர்,பழைய மாணவர் வகிபாகம் பொழுதுபோக்கன்று, பொறுப்புணர்வு! அதுதான் கூட்டுப் பங்கு. இதுபற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்.


மலையகக் கல்வியின் அடித்தளம் என்பது கடந்த 60–70 ஆண்டுகால அரசமயமாக்கல் வரலாற்றில் மட்டும் தொடங்கியதன்று. அதற்கு முன்னரே பாரதி இராமசாமி, கலகா எஸ். எம். கந்தசாமி, கருப்பண்ணன்பிள்ளை போன்ற முன்னோடிகள் தங்கள் சொந்த உழைப்பால் ஏழை மாணவர்களைத் தேடிச் சென்று கல்வி வழங்கிய தியாக வரலாற்றைக் கொண்டது.
முன்னாள் அதிபர் இர. சிவலிங்கம், ஆசிரியர்களான திருச்செந்துரன், ஜீவாரட்ணம் போன்றோரின் அர்பணிப்பும் மனிதநேயமும் மலையகக் கல்வியின் வேர்களை வலுப்படுத்தின. அந்தப் பாரம்பரியத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
ஆனால், இன்று கல்வி, ஆளுமையை உருவாக்கும் செயல்முறையாக இல்லாமல், மதிப்பெண்களை மையமாகக் கொண்ட வணிகப் போட்டியாக மாறியுள்ளது. ஆடம்பர விழாக்கள், தேவையற்ற அலங்காரங்கள், கட்டாய நிதி வசூல்கள் போன்றவை ஏழை மாணவர்களைக் கல்வி அமைப்பிலிருந்தே ஓரங்கட்டும் சூழலை உருவாக்குகின்றன.
இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட கல்வியை உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் சுயசிந்தனை, வாசிப்புப் பழக்கம், ஒழுக்கம்,சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும். வீட்டில் உரையாடும் பண்பாட்டை உருவாக்கி, கேள்வி கேட்கும் சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்.

மாணவர்களின் ஆளுமை விருத்தியில் பெற்றோர் அதேபோல், பழைய மாணவர் சங்கங்கள் ஆடம்பர நிகழ்வுகளுக்காக நிதி திரட்டும் அமைப்புகளாக அல்லாமல், வறிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி, நூலக மேம்பாடு, வாசிப்பு இயக்கம், தொழில் வழிகாட்டல் போன்ற நீண்டகால முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். போட்டிக் கல்வியால் பின்தங்கும் மாணவர்களுக்கு அவர்கள் பாதுகாப்புக் கேடயமாக இருக்க வேண்டும்.
மாணவர் ஆளுமை விருத்தியில் பெற்றோர் விளையாட்டுத் துறையில் மாற்றமும் மொழித் தடையும் உடைக்க வேண்டும்
விளையாட்டுத் துறையிலும் மாற்றம் அவசியம். மென்பந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது மட்டும் போதாது. ஒருகாலத்தில் சர்வதேச வீர்கள் விளையாடிய நுவரெலியா பரிசுத்த திருத்துவ தேசிய பாடசாலை மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டதும், இராகலை பாடசாலையின் ஹாக்கி பாரம்பரியம் சிதைந்ததும் நமது சமூகத்தின் கவனக்குறைவைக் காட்டுகிறது.
பெற்றோர்கள் விளையாட்டை நேர விரயமாகக் கருதாமல், பிள்ளைகளின் முழுமையான ஆளுமை வளர்சிக்கான கருவியாகப் பார்க வேண்டும்.

மாணவர்களின் ஆளுமை விருத்தியில் பெற்றோர், பழைய மாணவர் சங்கங்கள் தொழில்முறை அணுகுமுறையைப் பின்பற்றி, போட்டிகள், நிதி திரட்டும் நிகழ்வுகள் மூலம் பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு உள்கட்டமைப்பு,திறன் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
நுவரெலியாவைச் சேர்ந்த கே.பிரபாகர் – கோல்ப் விளையாட்டு வீரர், ஆசிய கோல்ப் சங்க உதவித் தலைவர் போன்ற உழைப்பால் உயர்ந்த சாதனையாளர்களை மாணவர்களுக்கு முன்மாதிரிகளாக அறிமுகப்படுத்த வேண்டும்.
சதுரங்கம் போன்ற அறிவுசார் விளையாட்டுகளிலும் மொழி ஒரு தடையாக மாறியுள்ளது. பல தமிழ் மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கும்போது, சிங்கள மொழி பேசும் நடுவர்களுடன் தங்களின் உரிமைகளையும் விதிகளையும் விளக்குவதில் சிரமப்படுகின்றனர்.

இதனால் திறமை இருந்தும் மொழிப் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்படும் நிலைமைகள் உருவாகின்றன. இதற்குத் தீர்வாக, பாடசாலை,பிரதேச மட்டங்களில் சதுரங்கக் கழகங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இருமொழித் திறனுடைய பயிற்றுவிப்பாளர்கள் மூலம் விளையாட்டு நுணுக்கங்களுடன் தொடர்பாடல் திறன், விதிமுறைகள் குறித்த அறிவும் தன்னம்பிக்கையும் கற்பிக்கப்பட வேண்டும்.
மொழி ஆளுமையும் புலமையாளர்கள் வழிகாட்டலும்
விளையாட்டுத் துறையில் மட்டுமன்றி மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் தொடர்பாடல் வளர்ச்சியிலும் மொழிப் பயன்பாடு பெரும் சவாலாக உள்ளது.
இன்று நியமத் தமிழ் மொழியானது உலக அளவில் இலங்கையில் மட்டுமே தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சூழல் நிலவுகிறது. இந்தியாவில் கூட தமிழ் மொழி சிதைந்து, அழிந்து வரும் நிலையை நோக்கிச் செல்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தகைய சூழலில், இலங்கையில் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 17 பிரதேசங்களில் மட்டுமே தமிழ் மொழி சரியான உச்சரிப்புடன் பேசப்படுவதாக ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.ஜே.யோகராஜா குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக, மலையகத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இந்த நியம மொழிப் பாவனையில் பெரும் குறைபாடுகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம்; மொழி அழியுமாயின் அந்த இனத்தின் அடையாளமும் அழிந்துவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே, பழைய மாணவர் சங்கங்கள் வெறும் பாடசாலை உள்கட்டமைப்புக்கு நிதி வழங்குவதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், இவ்வாறான விசேட தேவைகளை இனங்காண வேண்டும்.
மொழி ஆளுமை மிக்க பேராசிரியர்கள், புலமையாளர்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விசேட கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்த முன்னிற்க வேண்டும்.
திரட்டப்படும் நிதியை மாணவர்களின் இத்தகைய ஆளுமை வளர்ச்சிக்கு நேரடி முதலீடாக மாற்றுவதே காலத்தின் தேவையாகும்.
நிதி நிர்வாகமும் வெளிப்படைத்தன்மையும்
அதேநேரம், பாடசாலை நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். முறையான பற்றுச்சீட்டு அல்லது கணக்கு இல்லாமல் நிதி வழங்கும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும்.
பெற்றோர்களும் பழைய மாணவர்களும் நிதி வழங்குபவர்களாக மட்டும் அல்லாமல், அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுப்புடன் கண்காணிக்கும் சமூகமாக மாற வேண்டும். கேள்வி கேட்பது எதிர்ப்பன்று; அது நல்லாட்சிக்கான அடிப்படை.
மேலும், வெளிப்பிரதேச ஆசிரியர்களால் ஒருகாலத்தில் மாணவர்களுக்குக் கிடைத்த பல்கலைக்கழக,சிவில் சமூகத் தொடர்புகள் இன்று குறைந்துவிட்டன. இதனால் மாணவர்கள் குறுகிய உலகப் பார்வைக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
இதைத் தவிர்க கொழும்பு, யாழ்பாணம் உள்ளிட்ட முன்னணி பாடசாலைகளுடன் ஆசிரியர்–மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
புதிய முன்னுதாரணங்கள்
பாடசாலை மேடைகளிலும் மாற்றம் தேவை. அரசியல்வாதிகள், செல்வந்தர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் கலாசாரத்தை விடுத்து, கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உழைப்பால் உயர்ந்த முன்னுதாரணங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களே மாணவர்களின் ஆளுமையை வடிவமைக்கும் உண்மையான பாடங்களாக அமையும்.

பழைய மாணவர்கள் வெறும் விழாக்கள், பொழுதுபோக்கு, சுய விளம்பரத் திற்காகக் கூடும் கூட்டமன்று; அவர்கள் பாடசாலையின் காவலரண்கள். பெற்றோர்கள் வெறும் கட்டணம் செலுத்துபவர்கள் அல்லர்; அவர்கள் பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள்.
பெற்றோர்களும் பழைய மாணவர்களும் கைகோத்து, வறிய மாணவர்களின் கேடயமாக மாறி, விளையாட்டு, வாசிப்பு, மொழி ஆளுமை, நிதி வெளிப்படைத்தன்மை, கல்விச் சமத்துவம்,உலகளாவிய தொடர்புகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டால் மட்டுமே மலையக் கல்வியையும், நமது பிள்ளைகளின் ஆளுமையும் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த முடியும்.
வேலு இந்திரசெல்வன்

