பாடசாலைகளில் நிதி முறைகேடுகள் உண்மைதானா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் வருகிறது. அஃது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
சில பாடசாலைகளில் நிதி முறைகேடுகள், தேவையற்ற பண வசூலிப்புகள் மற்றும் கல்வி நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
கல்வி கற்பிக்கும் இடமாக இருக்க வேண்டிய பாடசாலைகள், படிப்படியாக நிதி வசூல் மற்றும் நிர்வாக முறைகேடுகளின் மையங்களாக மாறிவருகின்றன.
திட்டப்பணிகள் (Projects) என்ற பெயரில் மாணவர்களுக்கு தேவையற்ற செலவுகள் திணிக்கப்படுகின்றன.
பூச்சட்டிகள், Bio-data கோப்புகள், காட்சிப் பொருட்கள், பலகைகள், அலங்கார உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஒவ்வொரு பாட ஆசிரியரும் தனித்தனியாக ரூ.350 முதல் ரூ.1,000 வரை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
சில இடங்களில் ஒரு நாள் பாடசாலைக்கு வராத மாணவர்களிடம்கூட “மார்கர் பேனா”, “சாட் பேப்பர்” போன்ற பொருட்களை கொண்டு வருமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
உதாரணமாக, ஒரு நாள் வரவில்லை எனில் ஒரு மார்க்கர் ஐந்து நாட்கள் வரவில்லை எனில் ஐந்து மார்க்கர்கள்.
இதையும் படியுங்கள்: மலையகத்தில் மேலதிக வகுப்பு ஒரு சுரண்டல்
மேலும், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி அமைச்சின் Quality Input திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு கற்றல்-கற்பித்தல் உபகரணங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், மேற்பார்வைக் குழுக்கள் வருகை தரும் நேரங்களில்
வகுப்பறைகளை அலங்கரிப்பதற்காக மாணவர்களே தங்களது சொந்த செலவில் பிஸ்டல் போர்டுகள், மார்க்கர்கள், காட்சிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
மேலும் போட்டோ பிரதி எடுப்பதற்காக ஒரு பக்கத்திற்கு ரூ.40 வரை பாடசாலையிலேயே கட்டணம் அறவிடப்பகின்றது.
அதேபோல், “சிறுவர் சந்தை” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லை. மாணவர்களின் உழைப்பும், பெற்றோரின் பணமும் சுரண்டப்படுகின்றது.
சில பாடசாலைகளில் மாணவர்களை கட்டிடப் பணிகள், சுத்தப்படுத்தல் மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் நிதி முறைகேடுகள் உண்மைதானா?
பரீட்சை தினத்திலும் கட்டிட வேலைக்கு கற்களை தூக்க மாணவர்களை சம்பவங்களும் உண்டு. வகுப்பறை மேசைகள், கதிரைகளுக்கு பெயிண்ட் அடிப்பதற்கு பெற்றோரிடம் பணம் வசூலித்து பின்னர் மாணவர்களை வைத்து பெயிண்ட் அடித்துவிட்டு
அவற்றுக்கான “பராமரிப்பு செலவு என்று மேலதிக பண வசூலிப்பும் நடைபெறுகிறது.
மேலும், “ஒவ்வொரு பெற்றோரும் ஐந்து பூச்சாடிகள் வழங்க வேண்டும்” போன்ற கட்டாய அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.
( முக்கியமாக நுவரெலியா கல்வி வலயத்துக்குற்பட்ட கோட்டம் இரண்டு) இதனுடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒரே மாதிரியான சேலைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் விழா ஏற்பாடுகளுக்காக பாடசாலைக்கு வருகை தரும் அனைவரிடமும் நிதி அல்லது பொருள் உதவி கோரப்படுகின்றன.
ஊழலை எதிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்குப் போதிக்கும் அதே நேரத்தில், பெற்றோர்களிடமிருந்து தொடர்ச்சியாக நிதி மற்றும் பொருட்கள் கோரப்படுவதை எவ்வாறு எடுத்துக்கொள்வது?
கட்டாயப்படுத்தி வாங்கிவிட்டு. ” பெற்றோராக விரும்பி செய்கிறார்கள் ” என வெளியே பூசி மெழுகுவார்கள்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலவசக் கல்விக் கொள்கைக்கும், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கும் எதிரானவை.
எனவே, கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுத்து, பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் .
வினோதினி பாலசுப்பிரமணியம்
