மலையகத்தில் மேலகதிக வகுப்பு ஒரு சுரண்டல் நோக்கத்துடனேயே நடத்தப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
மலையகப் பாடசாலைகளில் நடைபெறும் மேலதிக வகுப்பு என்ற பெயரிலான சுரண்டல் – கல்வி என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல் என்றால் மிகையில்லை.
கல்வி என்ற உயரிய நோக்கத்தின் பெயரில், மாணவர்களின் உடல், மன மற்றும் சமூக நலன் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகிறதா என்ற கேள்வி எழுகிறது.
24 மணி நேரக் கல்வி அழுத்தம்
தூரப் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் அதிகாலை 5–6 மணிக்கே பாடசாலைக்கு வந்து, இரவு 10 மணி வரை வகுப்புகளில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுகிறது.
காலை 6.00–8.00 மணி வரை கணித வகுப்பு; அதனைத் தொடர்ந்து உடனடியாக வழக்கமான பாடசாலை நேரம் ஆரம்பமாகிறது. இதனால் பல மாணவர்களுக்கு காலை உணவு உண்ணவும், ஓய்வெடுக்கவும், கழிப்பறையைப் பயன்படுத்தவும் போதிய நேரம் கிடைப்பதில்லை.
மதியம் மீண்டும் மேலதிக வகுப்புகள், அதன் பின்னர் இரவு வரை தொடரும் வகுப்புகள். இதன் விளைவாக மாணவர்களுக்கு குளிக்க, உடை மாற்ற, சுயமாகப் படிக்க, குடும்பத்தினருடன் நேரம் செலவிட, அல்லது போதிய உறக்கம் பெற கூட வாய்ப்பு இல்லாமல் போகிறது.
பலர் பகல் நேர வகுப்புகளில் சோர்வால் தூங்கும் நிலையும் ஏற்படுகிறது. சுய கற்றல் என்பது முற்றிலும் இல்லாமல் போகின்றது.
மாணவிகளின் நலன் பற்றி சிறிதும் கவனத்தில் எடுப்பதில்லை
மாதவிடாய் காலங்களில் பெண் மாணவிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வசதிகள் பல பாடசாலைகளில் போதுமான அளவில் உள்ளனவா?
சுத்தமான கழிப்பறைகள், தொடர்ச்சியான நீர் வசதி, சுகாதாரமான சூழல் போன்ற அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படுவதில்லை.
இந்த நிலையில், நீண்ட நேரம் பாடசாலையில் தங்க வேண்டிய சூழல் அவர்களின் உடல் மற்றும் மனநலனில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இவர்கள் சற்றேனும் சிந்தித்தார்களா?
- இரவு நேர வகுப்புகள் – பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா?
- மாணவர்களை இரவு நேரத்தில் பாடசாலையில் தங்க வைத்து கற்பிக்க திட்டமிடுகிறார்கள். அதற்கான சட்டபூர்வமான அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?
பின்வரும் அடிப்படை அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனவா?
- பாதுகாப்பான தங்குமிட வசதிகள்
- சுத்தமான மற்றும் போதுமான கழிப்பறைகள்
- முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள்மின்சாரம் ஒருவேளை மின்சாரம் நிறுத்தப்பட்டால் மாற்று மின்சார ஏற்பாடுகள் என்ன இருக்கிறது?
- இரவு நேர பாதுகாப்பு கண்காணிப்பு
- குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பு
இந்தக் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் இதற்கு அவர்களிடம் பதில் இல்லை!
மேலதிக வகுப்புகள் – கல்விச் சேவை இல்லை. அவர்களது மேலதிக வருமானம்.
சில இடங்களில் மேலதிக வகுப்புகள் கல்வி சேவையை விட தனிப்பட்ட வருமான வழியாக மாறிவிட்டது
இரவு வகுப்புகள் மூலம் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்குப் பெற்றோரின் விசேட கவனிப்பும் மேலதிக வருமானமும் கிடைக்கிறது.
இதையும் படியுங்கள்: பெற்றோர் கேள்வி கேட்டால் அவதூறு பரப்பலாமா?
இதற்குப் பிரதிபலனாக, அந்த ஆசிரியர்களுக்குப் பாடசாலை நேரத்தில் அதிபர் சகல சலுகைகளையும் வழங்குகிறார். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே சென்று வரலாம்.
ஏனைய ஆசிரியர்களும் இதைப் போன்ற ஒரு வருமானப் பொறிமுறையையே உருவாக்கப் பார்க்கின்றனர்.
திட்டமிடப்படாத மலையகத்தில் மேலகதிக வகுப்பு பற்றி கேள்வி கேட்டால் பழிவாங்கல்
பாடசாலை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பும் பெற்றோர்களும் மாணவர்களும் அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இவ்வாறான செயல்கள் மாணவர்களின் கல்வி உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும், மனநலத்தையும் கடுமையாக பாதிக்கும் விடயமாகும். எந்த மாணவரும் அச்சத்தால் அமைதியாக இருக்க வேண்டிய சூழல் உருவாகக் கூடாது.
ஆலோசனை மற்றும் வழிகாட்டல் ஆசிரியர்களின் பங்கு என்ன?
ஒவ்வொரு பாடசாலையிலும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதன் நோக்கம், மாணவர்களின் மனநலனையும் கல்வி சார்ந்த சவால்களையும் கையாள்வதாகும்.
ஆனால் நடைமுறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தம், கல்வி அழுத்தம், துன்புறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளில் அவர்கள் எவ்வளவு செயற்படுகின்றனர்?
ஒருநாள் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றிவிட்டு வருபவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? வெறும் பெயரளவில் பதவி வகிப்பது மட்டுமே போதுமா?
சிந்திக்க வேண்டிய கேள்விகள்
சுத்தமான கழிப்பறை வசதி இல்லாமல் கல்வித் தரம் மட்டும் உயருமா?
நீர்பற்றாக்குறை, போசாக்கான உணவு இன்மை, பெற்றோரை இழந்த மாணவர்களின் மனநிலை போன்ற அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், மதிப்பெண் மட்டுமே வெற்றியின் அளவுகோலாக இருக்க முடியுமா?
மதிப்பெண்கள் முக்கியம். ஆனால் மாணவர்களின் சிறுபிராயம், மனநலம், உடல்நலம், பாதுகாப்பு மற்றும் மனித கண்ணியம் அதைவிட முக்கியமானவை.
கல்வி என்பது மாணவர்களை வெறும் பரீட்சைக்காகத் தயார்படுத்துவது மட்டுமல்ல; நல்ல மனிதர்களாக வளர்ப்பதுமாகும்.
எனவே, மலையகப் பாடசாலைகளில் நடைபெறும் மேலதிக வகுப்புகள், இரவு நேர தங்கல் நடைமுறைகள் மற்றும் மாணவர்களின் நலனைப் பாதிக்கக்கூடிய அனைத்து விடயங்களும் சுயாதீனமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
கல்வி அதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மனித உரிமை தொடர்பான பொறுப்பு அமைப்புகள் இவ்விடயங்களில் உரிய கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
வினோதினி பாலசுப்பிரமணியம்
