பெண் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர்
மலையகத்தின் மறு பக்கம் வெளிக்கொணர வேண்டும்! என்பது கல்விச் சாலைகளும் கல்வியாளர்களும் நிறைந்த மலையகம் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காகவாகும்.நாம் அன்றாடம் வாசிக்கும் தினசரிகளிலும் வார இதழ்களிலும் வெளிவரும் மலையகம் தொடர்பாக ஆக்கங்களையும் செய்திக் கட்டுரைகளையும் உற்று நோக்கும்போது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
படைப்பாளிகளின் உணர்வுமிக்க எழுத்தோட்டம் பாராட்ப்பட வேண்டியவை. படைப்பாளிகளின் பேனா முனைகள் எல்லாம் ஒரே பக்கமாக இழுத்துச் செல்வதுதான் சற்றுச் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.

200 ஆண்டுகால நிறைவைக் கடந்துவிட்ட இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழ் மக்கள் இன்றும்கூட இருபக்க வரிசை (லயன்) குடியிருப்புகளில் வசதியற்ற வாழ்க்கை வாழ்வதையும் போதிய அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல், கல்வி அறிவில் பின்தங்கியிருப்பதாகவும் திட்டமிட்ட குடும்பப் பராமரிப்பு இல்லாமலும் சிறு வயதிலேயே மதுபாவனைக்கு அடிமையாகிச் சீரழிவதாகவும் இவர்களின் ஆக்கங்கள் அப்படியே படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.
இதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை. அத்தனையும் உண்மைதான். எல்லாப் பேனாக்களும் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பதால் என்ன பயன்?
பின்தங்கிய மலையகம் என்ற பதத்தை நீக்குங்கள்!
இவற்றையெல்லாம் வாசிக்கும் (எலலோரும் அல்ல) பிற சமூகத்தவர்களும் நகர்ப்புற வாசிகளும் மலையகத்தில் தமிழர் என்றால், இங்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்ட கூலிகள்தானே! இன்றும் அப்படியேதானே!வாழ்கின்றனர்.
இவர்களுக்கு விமோசனம் கிடைக்காதா? என அனுதாபப்படுபவர்களும் உண்டு. ஏளனமாகவும் கொச்சையாகவும் விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எனவே நமது படைப்பாளிகள் இனிமேலாவது தமது பேனாக்களில் பின தங்கிய மலையகம், பின்தள்ளப்பட்ட மலையக மக்கள் போன்ற பதங்களைப் பயன்படுத்தக் கூடாது.
துரைக்கு மட்டும் மட்டுப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிள் சத்தம், இன்று தொழிலாளரின்
வீட்டிலிருந்து கிளம்புகிறது!
நம்மவர்களின் நிலைமையை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நடத்திக்கொள்ளட்டும். அதற்கு நாமும் துணைபோகக் கூடாது. நம்மை நாமே குறைத்து எடைபோட்டுக் காட்டக் கூடாது. வளர்ந்து வரும் மலையகம், எழுச்சிகண்டு வரும் மலையக தமிழ்சமுதாயம் என்ற உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

இன்று நமக்கு இருக்கும் ஒரு பெருங்குறை சொந்தமாக வீடுகள் இல்லை. காணி உரிமை இல்லை என்பதுதான். இது மட்டுமே நமது சமூகத்திற்கு முட்டுக்கட்டையாகவோ தடைக்கற்களாகவோ இருக்கவில்லை.
சொந்தக் காலில் நிற்கும் தமிழர் சமுதாய மலையகத்தின் மறு பக்கம்!
மலையகத்திற்கு நேரடியாகச் சென்று அதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். அரசாங்கமோ தோட்ட நிர்வாகங்களோ எமக்கு வேண்டிய வீடுகளைக் கட்டித்தர முன்வராதபோது தொழிலாளர்கள் தமது சுய உழைப்பில் வீடுகளை அமைத்து வாழ்கின்றனர்.

குடிநீரையும் மின்சார இணைப்புகளையும் பெற்று வசதியாக வாழ்கின்றனர். அதேவேளை மேலும் சிலர் முறையாக திட்டமிடல் இல்லாமல் பழைய குருடி கதவைத் திறவடி என்ற நிலையில் இருப்பதையும் காண முடிகிறது.
ஒரு சமுதாயத்தின் அடிப்படைத் தேவை வீடு. அஃது ஒரு மரியாதை. வீட்டுத் திட்டம் தொடர்பாக மலையகத் தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், லயன் அறைகளும் அதனைச் சூழ்ந்த வீட்டுத் தோட்டமும் அவர்களுக்கே சொந்தம் எனப் பெற்றுக்கொடுத்தார், நடைமுறைக்கு வரவில்லை.
அமரர் சந்திரசேகரன் ஏழு பேர்ச் காணியுடன் சுய வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கினார். ஊழியர் சேமலாப நிதியக் கடன் திட்டத்தையும் பெற்றுத் தந்தார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மாடி வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து திகாம்பரம், ஜீவன் தொண்டமான் எனப் பல மலையகத் தலைவர்களும் குறிப்பிடத்தக்களவு குடியிருப்புகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.
அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி இவர்கள் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுள் மூவர் அமரத்துவம் அடைந்துவிட்டாலும் இன்று நம்மோடு வாழும் மலையகத் தலைவர்கள் அனைவரும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமையையும் இதுவரை அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான உறுதிகளையும் பெற்றுக்கொடுத்துவிட்டால், வீட்டுப் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு காண முடியும்.
கொழுந்துக் கூடைகளுக்குப் பதில் இன்ரநெற் அன்டனாக்கள்!
மலையகத்தின் மறு பக்கம் இப்பொழுதும்கூடத் தோட்டப் புறங்களில் எந்தவிதமான உறுதிகளும் இல்லாத நிலையிலும் நகர்பபுறங்களைவிட வசதியானதும் நாகரிகமானதும் ஏன் மாடி வீடுகளும்கூட அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.
வீட்டின்முன் தொங்கிய கொழுந்துக் கூடைகள் இல்லை. இன்டர்நெற் அன்டனாக்கள் போன்றவற்றைக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

கல்வி வளர்ச்சியில் மலையகம் இன்று பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அன்று.ஆனால், இன்று மலையகத் தோட்டங்களில் மூன்று நான்கு கிலோ மீற்றர் இடைவெளியில் பாடசாலைகள் உருவாகி உள்ளன.
ஆரம்பப் பாடசாலைகள், மத்தியதரப் பாடசாலைகள், மத்திய கல்லூரிகள், தேசியப் பாடசாலைகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இவை அனைத்தையும் நிர்வகிக்கும் கல்வி அதிகாரிகள், பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தொழிலாளர்களின் வாரிசுகள் என்பது பெருமைப்படத்தக்கது.
கல்விச் சாலைகளும் கல்வியாளர்களும் நிறைந்த மலையகத்தின் மறு பக்கம்!
மலையகத்தின் மறு பக்கம் வெளிக்கொணர வேண்டும் என்பதற்கான முக்கிய காரணம் இன்று தோட்டத் தொழிலாளர்கள் தாம் பெறாத கல்விச் செல்வத்தைத் தமது பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.
மலையகத்தில் இன்று என்ன இல்லை? தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகள் மருத்துவர்களாக, சட்டத்தரணிகளாக, பொறியியலாளர்களாக, நில அளவையாளர்களாக, கணக்காளர்களாக, கல்விப் பணிப்பாளர்களாக, அதிபர்களாக, ஆசிரியர்களாக, ஏன் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையிலும் தலைவர்களாகத் தனித்துவமிக்கப் படைப்பாளர்களாக மிளிர்கின்றனர்.

நமக்கு முன் நோக்கினால் இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றவர்களும் நம்மவர்கள்தானே. இன்றும் சற்று உற்று நோக்கினால் கால்களில் செருப்புகூட இல்லாமல் கோச்சி றோட்டில் நடந்து வந்தேன் என்று கூறும் பேராசிரியர் தனராஜ், இன்று நீதித்துறையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஓர் ஆணையாளராக இருப்பதும் நமக்கெல்லாம் பெருமைதானே! தொடர்ந்து எழுதுவதென்றால் பெயர்ப்பட்டியலை எழுதவே இந்தப் பத்திரிகை இடம்கொள்ளாது.
உண்மை நிலை இதுதான். எனவே, படைப்பாளிகள் பசி, பட்டினி, வறுமை நிலைகளை மட்டும் வெளிப்படுத்தாமல் சற்று உள்ளே சென்று மறுபக்கத்தையும் புடம்போட்டுக் காட்டினால், தட்டிக்கொடுத்து வரவேற்றால் மலையகத்தின் நாளைய தலைமுறைகளை மேலும் உற்சாகப்படுத்தும் இல்லையா?
துரைக்கு மட்டும் மட்டுப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிள் சத்தம், இன்று தொழிலாளரின்
வீட்டிலிருந்து கிளம்புகிறது!
அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானைப் பதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நடைபெற்ற ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அத்தோட்ட நிர்வாகியும் அதில் கலந்துகொண்டார்.
16 வருடங்களாகத் தடைபட்டுத் தடைபட்டு வந்த இக்கோவில் நிர்மாணம் இப்போது நிறைவுபெற்றுள்ளது.தோட்டத்தில் ஆகப் பதிவுசெய்யப்பட்ட 150 தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஆனால்,தோட்டத்தில் வேலை செய்ய ஆள்கள் இல்லை. அதனால் தோட்டக் காணியைத் தொழிலாளர்களுக்கே குத்தகைக்குக் கொடுத்துள்ளோம் என்றார் அந்த நிர்வாகி.

இத்தோட்டத்தில் மட்டும் ஆசிரியர்கள் 29 பேர் இருக்கிறார்கள். ஐந்து அதிபர்கள் உள்ளனர். மருத்துவர்கள் இருவர்.சட்டத்தரணி ஒருவர், ஊடகவியலாளர்கள் நால்வர், கணக்காளர்கள் இருவர் என இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள்தான் என்பது பெருமக்குரிய விடயம் அல்லவா!
முன்பு தோட்டத்தில் தோட்டத் துரையின் மோட்டார் சைக்கிள் சத்தம் மட்டுமே கேட்கும். ஆனால், இன்று தோட்டங்களிலிருந்து அதிகாலை வேளையில் பல மோட்டார் சைக்கிள்களும் ஓட்டோக்களும் வெளிக்கிளம்புகின்றன. இஃது ஒரு பாரிய மாற்றம் இல்லையா?
ஒரு சின்ன தோட்டத்திலேயே இப்படியென்றால் மலையகம் எங்கும் உற்று நோக்கினால் நம்ப முடியாத கல்விப் புரட்சியைக் காண முடியும். நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பது புரியும்.
எனவே, தொடர்ந்தும் பின்தங்கிய மலையகம் என்ற பதத்தை மலையக அகராதியில் இருந்து நிக்கிவிட வேண்டும். மலையக மக்கள் என்பதை தமிழ் மக்கள் எனப் படைப்பாளிகள் பொன்னெழுத்துகளால் தங்கள் பேனாக்களில் எழுத வேண்டும்!
இது எனது துணிவானதும் பணிவானதுமான வேண்டுகோளாகும்! இதுபோன்று திறன்களுடன் இலைமறை காய்களாக இருப்பவர்கள் தம் கருத்துகளை வெளிக்கொணர வேண்டும்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. புத்திரசிகாமணி, இணையாசிரியர் மலைக்குருவி

மாணவர்களின் ஆளுமை விருத்தியில் பெற்றோர், பழைய மாணவர் வகிபாகம்
