முடிந்தால் வடமாகாண சுதேச மருத்துவத் துறைகளில் நிலவும் ஊழல், முறைகேடுகளையும் நிர்வாகக் குறைபாடுகளையும் ஒழித்துக் காட்டுமாறு கடற்தொழில் அமைச்சருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (03.06.2026)வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்தியர் தி. சர்வானந்தன் வெளியிட்டதாகக் கூறப்படும் நையாண்டித்தனமான கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் இந்தப் பகிரங்க சவாலை விடுக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டபோது, மாவட்டத்தின் தற்போதைய சித்த மருத்துவ சேவைகளின் நிலைமை மற்றும் அடிப்படை உண்மைகள் கருத்தில் கொள்ளப்படாமல் நையாண்டித்தனமாகப் பதிலளிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சித்த மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
16.05.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட ஆணையிடப்பட்ட பல விடயங்கள், ஒரு வருடத்திற்கும் மேலாகக் கடந்துள்ள நிலையிலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேலும், பல வைத்தியர்கள் பதிலீடு இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பல வைத்தியசாலைகளும் பொதுமக்களும் கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
வாரத்தில் ஆறு நாள் இயங்கிய சில வைத்தியசாலைகள் தற்போது இரண்டு நாள் மட்டுமே சேவையாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்காக பின்வரும் நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரப்படுகிறது:
- முல்லைத்தீவு கிராமிய சித்த வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் சேவை குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்தல்; செயலிழந்துள்ள வார்டுகளை மீளச் செயல்படுத்தல்; 1996 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவிப்பின்படி 40–100 கட்டில்கள் இருக்க வேண்டிய மாவட்ட வைத்தியசாலையில் தற்போது காணப்படும் கட்டில் பற்றாக்குறையை சரிசெய்தல். கிராமிய வைத்தியசாலையில் கட்டாயமாக இருக்க வேண்டிய வார்ட் வசதிகளை மக்களுக்காக உடனடியாக அமல்படுத்துதல்
- முல்லைத்தீவில் உள்ளகப் பயிற்சி (Intern Training) ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை எடுத்து தேவையான வசதிகளை ஏற்படுத்துதல்
- பதிலீடு இன்றி இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியர்களினால் ஏற்பட்ட குறைகளுக்கு உடனடி தீர்வு காணுதல்
- சித்த மருத்துவத்தின் மூலம் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை சேவைகளை முல்லைத்தீவில் அறிமுகப்படுத்துதல்.
20.03.2026 திகதியிடப்பட்டு ஏப்ரல் மாதத்தில் அனுப்பிவைக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை (RTI) பதிலில், போதிய வளங்கள் இல்லாமையால் சில வார்டுகள் இயங்கவில்லை என சுதேச மருத்துவத் திணைக்களம் தெரிவித்திருந்தது.
ஆனால் இன்றைய கூட்டத்தில் அனைத்து வைத்தியசாலைகளும் வார்டு வசதிகளுடன் சிறப்பாக இயங்குகின்றன என ஆணையாளர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுவது பல கேள்விகளை எழுப்புவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்டாயமாக இருக்க வேண்டிய உள்நோயாளர் (Ward) வசதி வடமாகாணத்தின் 14 கிராமிய வைத்தியசாலைகளில் 10 வைத்தியசாலைகளில் இல்லை. இதன் காரணமாக, உதாரணமாக யோகபுரம் பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் பல மணிநேரங்கள் பயணித்து புதுக்குடியிருப்பு கைவேலி மாவட்ட வைத்தியசாலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலி மாவட்ட வைத்தியசாலையில் குறைந்தபட்சம் 40 முதல் 100 கட்டில்கள் வரை இருக்க வேண்டிய தேவையுள்ள போதிலும், தற்போது ஆண் நோயாளிகளுக்காக 5 கட்டில்களும் பெண் நோயாளிகளுக்காக 5 கட்டில்களும் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் கடுமையான இடப்பற்றாக்குறையும் நோயாளி நெரிசலும் ஏற்படுகின்றன.
நிலைமை இவ்வளவு மோசமாக உள்ளதால், உள்நோயாளர் பிரிவில் அனுமதி பெறுவதற்குக் கூட ஒரு மாதத்திற்கு முன்னரே முற்பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இது வடமாகாண மக்களின் சுகாதார சேவைக்கான அணுகலை கடுமையாகப் பாதிக்கின்றது.
மேற்கண்ட பிரச்சினைகள் காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமன்றி ஒட்டுமொத்த வடமாகாண தமிழ் மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான பட்சத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள்வேத பாடத்திட்டத்தில் சிகிச்சை இல்லை என்ற ஆணையாளரின் கருத்தை மருத்துவர்கள் நிராகரித்துள்ளனர். அரச ஆயுர்வேத வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் முல்லைத்தீவில் ஏன் வழங்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஊழலை ஒழிப்பதற்காக வந்த அரசாங்கத்தின் வடபுலத்தில் உள்ள உயர் அதிகாரிகளே, சுதேச மருத்துவத் துறையில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழலுக்கு துணைபோகிறார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைக்கிறது.
எனவே, ஜனாதிபதி, சுகாதார அமைச்சர், கடற்தொழில் அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பகிரங்க சவால் விடுக்கின்றனர்:
“முடிந்தால் வடமாகாண சுதேச மருத்துவத் துறைகளில் நிலவும் ஊழல், முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளை ஒழித்துக் காட்டுங்கள். தகுதியான ஒருவரை ஆணையாளராக நியமியுங்கள்.”
பொதுமக்களின் நலனுக்காக செயற்பட வேண்டிய அதிகாரிகள் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல், பொறுப்புணர்வுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கௌசல்யா
