மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்தார். 34 வயதுடைய பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று(03) மாலை பாலமுனைப் பகுதியில் காணி ஒன்றினுள் மரத்தின் மேல் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது.
மரத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் தனது வாழ்வாதாரத் தேவைக்காக மரம் ஒன்றில் ஏறியிருந்த போதே எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி நிலைதடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
கௌசல்யா
