எமது மலையக சமூக மக்களின் எதிர்காலத்தை நிரணயிக்கும் ஒரே ஆயுதம் கல்வியாகும். எனவே மலையக மாணவர்கள் அனைவரும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதே தமது எதிர்ப்பாகும் என்று பெருந்தோட்ட,தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.
“எமது சமூகத்திற்கெனத் தனிப்பட்ட சொத்துகளோ, பரம்பரை சொத்துகளோ கிடையா. அதனால் எமது எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது” என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மத்திய மகா வித்தியாலயத்தில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிரமாணிக்கப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (12)பாடசாலை அதிபர் எம். வசந்த குமார் தலைமையில் நடைபெற்றது.
அதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு பிரதியமைச்சர் உரையாற்றினார்.
சபரகமுவை மாகாண ஆளுநர் திருமதி சம்பா ஜானகி ராஜரத்தின, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷா, சபரகமுவை மாகாண முன்னாள் உறுப்பினர் புஸ்பகுமார திசாநாயகக்கா, சபரகமுவை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பமுணு ஆராச்சி, உதவிச் செயலாளர் குமாரகே, இரத்தினபுரி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி தயானந்தா, உதவி கல்விப்பணிப்பாளர் எஸ். கவிதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் பிரதீப்:
எமது எதிர்காலத்தை நிரணயிக்கும் கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் கல்விக்கு முன்னுரிமை கொடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்களும் அதிபர்களும் எமது சமூக மாற்றத்திற்காகவும் சமூக விடுதலைக்காகவும் மாணவர்களின் கல்விக்காகவும் தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். மாணவர்களும் தமது கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கல்வியை சிறந்த முறையில் கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்பிரஜைகளாக உருவாக வேண்டும். இந்த அரசாங்கம் தனிப்பட்ட ஒருவருக்கான அரசாங்கமன்று. அனைத்து இன மக்களுக்குமான அரசாங்கமாகும். அதனால் மலையக பாடசாலைகளுக்குத் தேவையான 2 ஏக்கர் காணி பெற்றுக் கொடுக்கப்படும். இது குறித்து பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹிணி அமரசூரயா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம். இதன் மூலம் மலையகப் பாடசாலைகளிலுள்ள 22 பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். மலையக பாடசாலைகள் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டடன. ஆனால், எமது ஆட்சியில் மலையகப் பாடசாலை களுக்குத் தேவையான வளங்களையும் மாகாண சபைகளின் ஊடாக பெற்றுக் கொடுத்து வருகின்றோம். எமது இந்தத் திட்டத்திற்கு பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இப்பாடசாலைக்கு ஆசிரியர் விடுதியும் மாணவர் விடுதியும் பெற்றுக்கொடுக்கப்படும். 2 ஏக்கர் காணியை மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள 42 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அத்துடன் இப்பாடசாலைக்கு இதுவரை 7 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் அதி சிறந்த பாடசாலையாக ஸ்ரீகிருஸ்ணா மத்திய மகா வித்தியாலயம் தரமுயர்த்தப்படும்.
எஸ். ஆர். இரவீந்திரன்






