வேளாண் துறையை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பினைர் கோரிக்கை விடுக்கின்றனர்.
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளை உள்ளூர் விவசாயிகளின் குரல் அமைப்பு, கடுமையாக விமர்சித்தது.
வேளாண்மைத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவராகத் தாங்கள் நம்பும் ஜனாதிபதி நேரடியாக வேளாண்மை அமைச்சை பொறுப்பேற்க வேண்டும் என அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் அதேவேளை பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை பாதுகாத்து வரும் விவசாயிகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதும் கேலிக்குள்ளாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
எனவே வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு, வேளாண்மை அமைச்சின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வேளாண்மைத் துறையைப் பற்றிய போதிய அறிவில்லாத நிர்வாகிகளின் குறுகிய நோக்குடைய தீர்மானங்களால் விவசாய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த 12ஆம் திகதி நுவரெலியாவில் இந்த விசேட ஊடகச் சந்திப்பு நடத்தப்பட்டது.
இச்சந்திப்பில் தேசிய கோவி ஹட அமைப்பின் தலைவர் தரிந்து ரத்நாயக்க, நுவரெலியா இளைஞர் விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ஹசித வீரசிங்க மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் நலன் கருதி வேளாண் துறையை ஜனாதிபதி ஏற்க வேண்டும்
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளை உள்ளூர் விவசாயிகளின் குரல் அமைப்பு, கடுமையாக விமர்சித்தது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைப்பின் தலைவர் தரிந்து ரத்நாயக்க:
உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகள், மரக்கறி விவசாயிகள்,நெல் விவசாயிகள் ஆகியோர் அதிகாரிகளின் தொலைநோக்கற்ற நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண்மைத் துறையில் போதிய அறிவு கொண்டவர் என நாங்கள் நம்பும் ஜனாதிபதி உடனடியாக வேளாண்மை அமைச்சை பொறுப்பேற்றால், விவசாயிகள் அனைவரும் ஜனாதிபதியுடன் இணைந்து செயல்படத் தயார்.
இல்லையெனில் எதிர்காலத்தில் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
நாட்டின் அனைத்து விவசாயிகளும் கடுமையான நெருக்கடியில் இருக்கும் இக்காலத்தில், வேளாண்மை அமைச்சர்,பிரதியமைச்சரின் கேலிக்கும் அவமதிப்புக்கும் விவசாயிகள் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு விவசாயிகள் வீழ்ச்சியடைந்துள்ள இந்நேரத்தில், அமைச்சர்களின் நடவடிக்கைகளால் உருளைக்கிழங்கு,மரக்கறி விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
தற்போது மரக்கறிகளையும் உருளைக்கிழங்கையும் சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.பொருளாதார மத்திய நிலையங்களும் அரசாங்கமும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
விவசாயிகள் அவமதிக்கப்படுகின்றனர்
இந்நிலையில், வேளாண்மை அமைச்சர்,பிரதியமைச்சர் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடுகின்றனர்.
வேளாண்மை அமைச்சர் வேறோர் உலகில் வாழ்பவர் போல செயல்படுகிறார். முதலில் மதகுருமார்களை அவமதித்த அவர், தற்போது விவசாயிகளையும் அவமதித்து வருகிறார்.
வெளிநாடுகளிலிருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து ஜனாதிபதியிடமிருந்து பதிலை எதிர்பார்த்த போதிலும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
வேளாண்மைத் துறையை சரியான முறையில் நிர்வகிக்கும் திறன் தற்போதைய நிர்வாகத்துக்கு இல்லை என்பதே எங்களது கருத்து.
வேளாண்மைத் துறையில் போதிய அறிவில்லாமல் செயல்படும் அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனடியாக நீக்கப்பட்டு, வேளாண்மை அமைச்சு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நுவரெலியா இளைஞர் விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ஹசித வீரசிங்க:
அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறும் நோக்கில் மட்டுமே விவசாயிகளைப் போற்றுவதாகவும், விவசாயிகளுக்கு அரசர்களாக மாற வேண்டிய எந்தவித விருப்பமும் இல்லை என்றும் கூறினார்.
உலகின் பல முன்னேறிய நாடுகளில் நவீன விவசாயி என்பது தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தொழில்முனைவோராகக் கருதப்படுகிறார்.
ஒவ்வொரு நாட்டிலும் விவசாயி ஒரு தொழில்முனைவோராக மதிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையில் தற்போதைய அரசாங்கமே விவசாயிகளை கேலிக்குரியவர்களாக மாற்றியுள்ளது.
இன்று “விவசாயியே ராஜா” என்ற கருத்தை கேலி செய்பவர்கள், தேர்தல் மேடைகளில் அதே கோஷத்தை எழுப்பியவர்களே. அவ்வாறான பேச்சுகள் தற்போது நகைப்புக்குரியதாகிவிட்டன.
நாங்கள் கோருவது “விவசாயியை ராஜாவாக்க வேண்டும்” என்ற வெறும் அரசியல் கோஷமல்ல; மாறாக விவசாயியை உண்மையான தொழில்முனைவோராக உருவாக்கும் தேசிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
இதையும் படியுங்கள்: தோட்டப் பெண்களுக்குக் குரங்குகள் தொல்லை
அரசாங்கம் இதுகுறித்து போதிய கவனம் செலுத்தாத போதிலும், விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட அரசாங்கம் தொடர்ந்து கேலிக்குரிய கருத்துக்களை வெளியிட்டால், அது விவசாயிகளை அவமதிக்கும் செயல் மட்டுமன்றி அவர்களின் கண்ணியத்தையும் பாதிக்கும் செயலாகும்.
எனவே, தற்போதைய ஜனாதிபதி இப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கி, வேளாண்மை அமைச்சை நேரடியாக தனது பொறுப்பின் கீழ் கொண்டு வரவேண்டும்.
நாட்டின் வேளாண்மைத் துறைக்கான தெளிவான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என மரியாதையுடன் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியா ஆர். எப். எம். சுஹைல்
