விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாகும். அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு, கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உர மானியத்தை இரு மடங்காக அதிகரித்தல், டித்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு வரலாற்றில் மிகக் கூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்குதல், நெல் கொள்வனவுக்காக வரலாற்றில்
அதிகளவிலான நிதியை ஒதுக்குதல், பாரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்
உட்பட விவசாய மக்களுக்காகக் குறிப்பிடத்தக்க அளவிலான பணிகளை அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றினார்.
அநுராதபுர மாவட்டத்தின் பதவியா, கெபிதிகொல்லேவை, ஹொரவப்பொத்தானை, கஹட்டகஸ்திகிலியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு நோய்க்கு ஒரு தீர்வாக,
அப்பிரதேசத்திலுள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன், இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம், இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இப்பிரதேசங்களில் பரவி வரும் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோய்க்கு (CKD) சுத்தமான குடிநீர் இல்லாமையே பிரதான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டம் வெறும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மட்டுமல்லாது, விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என்பதோடு மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதாகும் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்திற்கும், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும்
தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வரலாறு நெடுகிலும் நாட்டிற்குள் நீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரையில் சுமார் 60% (42-43 இலட்சம் குடும்பங்கள்) மக்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர் வசதி கிடைத்துள்ளது.
என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் 2000 கோடி ரூபாய் செலவில் 22 குடிநீர் வழங்கல் திட்டங்களின் பணிகளை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
பழைய திட்டங்களை விரிவாக்குவதன் மூலமும் , புதிய திட்டங்கள் மூலமும் புதிதாக சுமார் 10 இலட்சம் குடும்பங்களுக்கு புதிய நீர் விநியோகங்களை வழங்குவதற்குத் தேவையான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்வேறு அபிவிருத்திப் பணிகளுமன் விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
இந்த விவசாயக் குடியேற்றங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டே எமது அரசாங்கம் செயற்படுகிறது.
அவர்கள் தற்போது வாழும் நிலையை விட சிறந்ததொரு வாழ்க்கையை அவர்களுக்கு உரித்தாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.
அதுமட்டுமன்றி, விவசாய மக்களுக்கு தற்போது கிடைத்துள்ள சமூக மதிப்பை விடவும், உயர்ந்ததொரு சமூக மதிப்பையும் கௌரவத்தையும் உரித்தாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.
இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் சுழற்சி முறையிலான வறுமையின் காரணமாகப் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.
இந்தச் சுழற்சி முறையிலான வறுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு மிக முக்கியமானதாக இருப்பது கல்வியாகும்.
எனவேதான், கல்வியில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கெனத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
அதில், குறிப்பாக புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எமது பிள்ளைகள் உலகிலுள்ள நவீன அறிவை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் கல்வித்துறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதேபோல், எமது நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள பாடசாலைக் கட்டமைப்பை, அதிநவீன வசதிகளைக் கொண்ட ஒரு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலைக் கட்டமைப்பாக மாற்றுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
அத்துடன், பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற அனைத்து விடுதிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
மேலும், 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 50 தொழிற்பயிற்சி நிலையங்களைத் திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
இதையும் படியுங்கள்: தம்புத்தேகமை நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு
எனவே, எமது நாட்டுப் பிள்ளைகளின் எதிர்காலக் கதவுகளைத் திறந்துவிடக்கூடிய கல்விச் சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
அதுமட்டுமன்றி, பாடசாலைப் பிள்ளைகளுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
நாங்கள் இந்த நாட்டுப் பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஓர் அரசாங்கமாவோம்.
அதேபோன்று, மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தி, அவர்களுக்கு ஆரோக்கியமா னதொரு வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுக்கும் பொறுப்பை நாம் தற்போது நிறைவேற்றி வருகின்றோம்.
நாடு முழுவதும் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பது மாத்திரமல்லாமல், சுகாதாரத் துறையை தற்போதுள்ள நிலையை விட உயர்வான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
வைத்தியசாலைகளுக்கு எவ்வளவு அம்பியூலன்ஸ்கள் தேவையோ, அவை அனைத்திற்கும் 2027ஆம் ஆண்டில் நிதியை வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
இன்று விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மிக விரைவாகக் குணமடைதல் ஆகியவை உயர் மட்டத்தில் காணப்படுகின்றன.
அதற்கெனத் தேவையான உபகரணங்கள் என்னவென்று எங்களுக்குத் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம்.
அடுத்த ஆண்டில் 10 சிறுநீரக சுத்திகரிப்பு (Dialysis) மையங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நாம் தயாரித்துள்ளோம்.
நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நாம் தயாராக உள்ளோம்.
