நோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் சபையைப் புறக்கணித்ததால் மாதாந்த சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
சபையின் தவிசாளர் ஜோஹன்னஸ் பிரான்சிஸ் அலன் அவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் இன்று (07) நடைபெற்ற மாதாந்த சபை அமர்வைப் புறக்கணித்தனர்.
சபை அமர்வின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டாலும், சபை மண்டபத்திற்குள் செல்லாத நிலையில் உறுப்பினர்கள், சபை மண்டபத்திற்கு முன்னால் நின்றவாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஹற்றன் அகரவத்தை – லொனாக் பாதையை உடனடியாகப் புனரமைக்கவும்
சபையை நடத்துவதற்குத் தேவையான கோரம் (குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை) இல்லாத காரணத்தினால், தவிசாளர் சபை அமர்வை இம்மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள்:
சபை உறுப்பினர் பந்துசிறி ரணவீர உள்ளிட்ட உறுப்பினர்கள் கூறுகையில், நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் எவ்வித முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்துவதில்லை. கடந்த ஒரு வருடகாலமாக பிரதேசத்தில் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.
தவிசாளர் அவன் ஜோகான்ஸ் பிரான்சிஸ் கருத்து தெரிவிக்கையில், கோரம் இல்லாத காரணத்தினாலேயே சபை ஒத்திவைக்கப்பட்டதாகவும், தனது செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்
