சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் சீல் வைக்க உத்தரவிட்டதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.
கடந்த 2026 ஜூலை 4ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, சுகாதார தரநிலைகளை பின்பற்றாமல் இயங்கிய மூன்று உணவகங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து, அந்த உணவகங்களுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 2026 ஜூலை 15ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.


வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று உணவகங்களையும் உடனடியாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டதுடன், அவற்றுக்கு முறையே ரூ.33,000, ரூ.36,000 மற்றும் ரூ.39,000 அபராதம் விதித்தது.
அத்துடன், ஒரு மாத காலத்திற்குள் உணவகங்களில் காணப்பட்ட அனைத்து சுகாதார குறைபாடுகளையும் முழுமையாகச் சரிசெய்து, அதுகுறித்த தகவலை பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாசிக்க: நுவரெலியா பொருளாதார மையத்தில் மரக்கறி சேகரிப்பு நிலையம்
அதன் பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகர் மேற்கொள்ளும் ஆய்வில் திருப்திகரமான அறிக்கை கிடைத்தால் மட்டுமே, உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலவாக்கலை நகரிலுள்ள சில உணவகங்களில் சுகாதார நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என பொதுமக்கள் நீண்டகாலமாக கவலை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரநிலைகள் தொடர்ச்சியாகப் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், இத்தகைய திடீர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வினோதினி பாலசுப்பிரமணியம்
