தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்ணின் உடலுக்குப் பாலியல் கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று(05), நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள், பெண்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
இச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவச் சாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
அந்நிலையில், வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளர்கள் மூவரால் பெண்ணின் உடல் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், தவறிழைத்தவர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனக்ற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து கடந்த மாதம் 3 ஆம் திகதி கிளங்கன் வைத்தியசாலை வளாகத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப்போது போராட்டக்காரர்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள் இருபாலரும் இச் சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை வேண்டும் என்றும், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும், இவ்வாறான செயலில் ஈடுபட்ட மூன்று பேரும் பணியில் இருந்து உடனடியாக இடை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், இச் சம்பவம் இனியும் இலங்கையில் எப்பகுதியிலும் நடைபெறாத வண்ணம் இன்றைய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும், என்றும் கோஷங்களை எழுப்பினர்.
அதன்படி, ஹட்டன், மஸ்கெலியா, வட்டவளை, வெளிஓயா, பொகவந்தலாவ, டிக்கோயா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரபத்தனை, நுவரெலியா, கந்தபளை, கொத்மலை,இறம்பொடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருந்திரளான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும், குற்றத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
மஸ்கெலியா நிருபர்.செ .தி.பெருமாள்.

