நுவரெலியா விடுதியில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுத் கண்டி தெல்தெனியா பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனியா வைத்தியசாலைக்கு அருகில் புதன்கிழமை (17) மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் நுவரெலியாவிலுள்ள சுற்றுலா விடுதியில் பல நாள்கள் இரண்டு முறை தங்கியிருந்தமை நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 02ஆம் திகதி அந்தப் பெண்ணுடன் விடுதிக்கு வந்து 10ஆம் திகதி வெளியேறிச் சென்றுள்ளார். பின்னர் 16ஆம் திகதி அந்தப் பெண் மாத்திரம் தனியாக விடுதிக்கு வந்துள்ளார்.
அதன்பின்னர், 17ஆம் திகதி இரவு சுமார் 9:00 மணியளவில், சந்தேக நபர் வாடகைக் காரில் விடுதிக்கு வந்து, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதிப் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்து, தனது காதலியை ஏற்றிக்கொண்டு, விடுதிக் கட்டணத்தைச் செலுத்தி, பெண்ணைக் காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.இதுபற்றி விடுதிப் பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் கூறுகையில், அம்பாறை வைத்தியசாலையின் பெண் இயன் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருபவரும் வெலிகமை பகுதியைச் சேர்ந்தவரும் ஆவார்.33 வயதான பி. ஆர். ஷ்யாமா தர்ஷனி என்ற இந்தப் பெண், 2023 முதல் மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி, தனது வேலையை இராஜிநாமா செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகச் பொலிஸார் தெரிவித்தனர்.
அவள் காதலனான, கண்ணொருவையைச் சேர்ந்த 35 வயதான டி. எம். எஸ். தினெத் திசநாயக்கா, தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்து, அவரதுஉடலை விடுதியிலிருந்து வெளியே கொண்டு சென்று ஒரு காரில் ஏற்றி, கண்டி தெல்தெனியா வைத்தியசாலைக்கு அருகில் விட்டுச் சென்றிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகநபர் அப்பெண்ணின் முகத்தை மூடியபடி அவரைத் தூக்கிச் செல்லும் காட்சி விடுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிரிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்:
071- 8591096 உதவி பொலிஸ் அத்தியட்சகர், நுவரெலியா
071- 8591097 தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர், நுவரெலியா அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கெளசல்யா
