டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி.
ஹற்றன் பஸ் நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகமை பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவை சீராக நடைபெறுவதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.
அடிக்கடி பஸ் சேவையில் ஈடுபடாத காரணத்தால், நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.நேற்று முன்தினமும் இந்த பஸ் சேவை இடம்பெறவில்லை.
குறிப்பாக டயகமை, அக்கரப்பத்தனை, மன்றாசி, ஹோல்புறூக், அல்பியன், டொரிங்டன், பிரஸ்டன், ஆட்லோ, பிரேமோர் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று அரச,தனியார் துறை ஊழியர்களும் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல பல மணி நேரம் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்ச்சியாக ஏற்படும் போக்குவரத்து குறைபாடுகள் காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், ஆசிரியர்களின் கடமைகள், பொதுமக்களின் அன்றாடத் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு பொருளாதார இழப்புகளும் ஏற்படுகிறது.
மாதாந்த பருவகாலச் சீட்டுகளை முன் கூட்டியே பணம் செலுத்திப் பெற்று, அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் தனியார் வாகனங்களில் அதிக பணம் செலுத்திச் செல்ல வேண்டியுள்ளது.
பேருந்து சேவையில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக மாற்றுப் பேருந்தொன்றை உடனடியாக சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடைமுறைகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

