பெருந்தோட்டங்களில் பாதை, விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்பட வேண்டும். மாதாந்த சபை அமர்வில் ஜீவன் வலியுறுத்து.
உள்ளூராட்சி தான் மாற்றத்தின் அடித்தளம். இது தான் மக்களுக்கு நேரடியாக பணியாற்றும் அரச நிறுவனம். பிரதேச சபை உறுப்பினர்கள் தான் மக்களுடைய நேரடி பிரதிநிதிகள். ஆகவே அவர்களுக்கு மக்கள் பணி செய்வதற்கான சூழலை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஏற்படுத்தி தரவேண்டும். உலகத்திலே இலங்கையில் மட்டும்தான் நகரம் கிராமம் தோட்டம் என மூன்று நிருவாக பொறிமுறை இயங்குகின்றது. இது தான் உள்ளுராட்சி செயற்பாடுகளில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாகின்றது ஆனாலும் 2015-2020ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கமைய தோட்ட முகாமைத்துவத்தின் அனுமதியுடன் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த சபை கவனத்தில் கொள்ள வேண்டும் இவ்வாறு அம்பகமுவ பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய உறுப்பினர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்
இன்று (19/03/2026) அம்பகமுவ பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபை தவிசாளர் கப்பில நாகந்தல தலைமையில் நடைபெற்றது
இன்றைய அமர்வில் உறுப்பினர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்டங்களில் பாதைகள் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பதிலும் வாசிகசாலைகள் சனசமூக நிலையங்கள் அமைப்பிலும் அம்பகமுவ பிரதேச சபை எதிர்காலத்தில் அக்கறைசெலுத்தவேண்டும். இப்போது இந்த சபைக்கு சமர்ப்பிக்கும் மாணவர்களடங்கிய இந்த புகைப்பட ஆவணம் கரோலினா ட்றபல்கார் தோட்டத்தில் குடியிருப்புக்கு மத்தியிலுள்ள சிறிய மதகு ஒன்றாகும். (பாலம்) பழுதடைந்த நிலையிலுள்ள இந்தப் பாதையை பொதுமக்களும் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர்
இந்தப் பாலம் அனர்த்தம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது ஆகவே மணவர்களின் நலன் கருதி உடனடியாக திருத்தி அமைப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டுமென கோருகின்றேன்.
அத்தோடு பிரதேச சபைகளின் பணிகளை நகரம் கிராமம் பெருந்தோட்டம் என்ற பாகுபாடு கடந்து பணிகள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் வட்டவளை நகர மக்கள் தொடர்ந்து சேற்று நீரையே குடிநீராக பயன்படுத்துவதை அறிந்த பிரதேச சபை வட்டவளை மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளார் கடந்த வருடம் தெரிவித்தார்
ஆனால் இன்று ஆறுமாதங்கள் கடந்தும் குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. சேற்றுநீரை அருந்தும் வட்டவளை நகர மக்களுக்கு சிலநேரம் சேற்று நீருக்கும் பஞ்சம் ஏற்படும் நிலைமையே இருக்கின்றது
ஆகவே முறையான குடிநீர் திட்டமொன்றை அமுல்படுத்துமாறும் வேண்டுகிறேன். தியகலை சந்திக்கும் கடவளை தோட்டத்திற்கும் இடையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகன சாரதிகள் பொது மக்களின் நலன் கருதி குடிநீர் பெற்றுக்கொள்ளுவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள குடிநீர் குழாய் மூடப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இது தொடர்பாகவும் பிரதேசசபை கவனத்தில் கொள்ளவேண்டும் அம்பகமுவ பிரதேச எல்லைக்குள் புதிதாக பல குடியிருப்புகள் தோற்றம் பெற்றுள்ளன குறிப்பாக வட்டவளை நகருக்கு அண்மையில் 50 மேற்பட்ட வீடுகளைக்கொண்ட குடியிருப்பு தோற்றம் பெற்றுள்ளது
இது போன்ற மேலும் பல இடங்களை குறிப்பிடலாம் இது போன்ற குடியிருப்புகளை கிராமங்களாக அங்கீகரித்து பிரதேச சபை உள்வாங்க வேண்டும். அம்பகமுவ பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான தோட்டப்பகுதிகளிலுள்ள குளங்களை அபிவிருத்தி செய்து அதை சுற்றுலாத்தளங்களாக மாற்றியமைப்பதன் மூலம் அப்பகுதிகளிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளவும் சபைக்கு மேலதிகமான வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
வட்டவளை நிருபர் கேதீஸ்வரன்
