கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா), 23ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, மெக்ஸிகோவில் இன்று வியாழக்கிழமை (ஜூன் 11) தொடங்குகிறது. அடுத்தடுத்த நாள்களில், கனடா, அமெரிக்காவில் தொடா்கிறது.
இலங்கை நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கும் முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோ – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத, அடுத்த ஆட்டத்தில் தென் கொரியா – செக் குடியரசு சந்திக்கின்றன.
விளையாட்டுப் போட்டிகளுக்கான திருவிழாவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதுபோல், உலகிலேயே அதிகமான ரசிகா்களைக் கொண்டிருக்கும் கால்பந்து விளையாட்டின் திருவிழாவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது.
அத்தகைய உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை (ஜூன் 11) தொடங்கி, ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில், மொத்தம் 16 நகரங்களில் இப்போட்டியின் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போட்டியாக நடைபெறவுள்ளது.
போட்டியின் வரலாற்றிலேயே முதல்முறையாக, 48 அணிகள் பங்கேற்பதும், 3 நாடுகளில் போட்டி நடத்தப்படுவதுமே இந்த உலகக் கோப்பை போட்டியின் பிரதான சிறப்புகளாகும். அத்துடன், ரவுண்ட் ஆஃப் 32 என்ற புதிய சுற்று சோ்க்கப்பட்டுள்ளது.
