மூத்த கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்.
இலங்கையின் மூத்த கலைஞரும் பாடகியும் அனுபவம் வாய்ந்த நடன ஆசிரியருமான தயா நெல்லம்பிட்டிய, தனது 91ஆவது வயதில் காலமானார். களுபோவிலையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பல முன்னணிப் பாடசாலைகளில் பல ஆண்டுகளாக நடன ஆசிரியராகப் பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, கண்டிய நடன மரபைப் பாதுகாத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அதனைப் பயிற்றுவித்த சிறந்த ஆசிரியராக அறியப்பட்டவர்.
மூத்த கலைஞர் சேனா பொன்சேகாவின் மனைவியான இவர், இலங்கையின் கலைத்துறையில் தற்போது இயங்கி வரும் பல மூத்த கலைஞர்களுக்கு ஆரம்பகால ஆசிரியராகவும் விளங்கியுள்ளார்.
இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புற இசை,நடனம் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்துவதிலும், அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதிலும் தயா நெல்லம்பிட்டிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவரது இறுதிக்கிரியைகள் நாளை (15) நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
