சிக்மா படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய், “முதல்வராக இருக்கும் எனது தந்தைக்கு நன்றி” எனக் கூறிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் அக்.2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடும் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேற்று இரவு நடந்த சிக்மா படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசியிருப்பதாவது:
நாம் அனைவரது வாழ்க்கையிலும் சிக்மா தருணம் இருக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தில் பலருக்கும் பலவிதமான தேவைகள் இருக்கின்றன. அப்போது அவர்கள் எடுத்த ஒரு முடிவினால் அவர்களது வாழ்க்கையே மாறும்.
அப்படிப்பட்ட பயணம்தான் சிக்மா. முதல் படம் என்பதால் இது எனக்கு சிறப்பானதாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கிறது. 22 வயதில் எனது கதையை நம்பியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் உருவாக்கத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி.
எனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எனது அம்மாவுக்கு நன்றி. எனது அப்பா… இப்போது முதல்வராக இருக்கிறார். அவருக்கும் நன்றி. எனது இனிமையான சகோதரிக்கும் நன்றி என்றார். மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
