தாலிக்கொடியை அடகுவைத்து கள்ளருக்குப் பணம் கொடுத்த பெண் இறுதியில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து பொதி வந்திருப்பதாகக் கூறிய மோசடிக்காரர்களின் வார்த்தையை நம்பிய பேராசைகொண்ட பெண்ணொருவர், கணவனுக்கும் தெரியாமல் தனது தாலிக்கொடியை அடகுவைத்துப் பணம் செலுத்திய சம்பவமொன்று தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது.
இது சம்பந்தமாக அந்தப் பெண் நேற்று (22) பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார்.
விமானப் பொதியை படங்களாகக் காட்டி அப்பாவி மக்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஈஸி கேஷ் முறையிலிருந்து வங்கிக்கு பணத்தை வைப்பிலிடுதல் வரையிலும் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.
இவ்வாறான சம்பவமொன்று தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில், சனிக்கிழமை (22) அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்த அந்த பெண், தனது கணவனுக்குத் தெரியாமல் தாலிக்கொடியை அடகுவைத்து, பணத்தை வைப்பிலிட்டுள்ளார். அதற்கு பின்னர், பரிசு தருவதாக கூறியவரின் அலைபேசி வேலையே செய்யவில்லை.
அந்த பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்துக்கு இப்படியான குறுஞ்செய்திதான் ஆங்கிலத்தில் வந்துள்ளது.
“உங்கள் வீட்டு முகவரிக்கு வெளிநாட்டில் இருந்து பொதி (Luggage) வந்துள்ளது; சுங்கக் கட்டணமாக 150,000 ரூபாவைச் செலுத்த வேண்டும்”, “பொதிக்குள் வெளிநாட்டு டொலர்கள் உள்ளன; ஐ.எம்.எஃப் (I.M.F) சான்றிதழ் பெற மேலும் 387,500 ரூபாய் செலுத்த வேண்டும்” –
இது போன்ற குறுஞ்செய்திகளோ அல்லது தொலைபேசி அழைப்புகளோ உங்களுக்கு வருகிறதா? எச்சரிக்கையாக இருங்கள்! இது இணைய மோசடி நபர்களின் (Online Scammers) மற்றுமொரு புதிய முகமூடியாகும்.
இது போன்ற பொய்களை நம்பி ஏமாறும் அப்பாவி மக்களை இலக்கு வைத்தே இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன.
கௌசல்யா
