அடுத்தவங்க பணம் நமக்கு வேண்டாம் என்று சிந்தித்த உயர் தர மாணவி ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் கிடந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் அக்கரபத்தனையில் இடம்பெற்றுள்ளது.
அக்கரப்பத்தனை பகுதியில் ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேரச் செய்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி, பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்குச் சென்றபோதே அங்குப் பணம் விட்டுச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர், அந்தப் பணத்தை தனது வசம் வைத்துக் கொள்ளாமல் பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் ரூ.15,000 பணமும் அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகி வரும் நிலையிலும், கிடைத்த பணத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மாணவி மேற்கொண்ட இந்த நேர்மையான செயல், அக்கரப்பத்தனைப் பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இளம் தலைமுறையினருக்கு நேர்மை, பொறுப்புணர்வு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறந்த முன்னுதாரணமாக இந்த மாணவியின் செயல் அமைந்துள்ளது.
கௌசல்யா
