அரசியல்வாதிகளின் ஊழலால் நாடு வங்குரோத்து அடைந்தது என்று அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலஞ்சம், ஊடல், மோசடி போன்ற நடவடிக்கைகளிலே அரசியல்வாதிகளும் அதற்குத் துணை நின்ற அரச அதிகாரிகளும் ஈடுபட்டிருந்ததால் அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்தது என தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டக் குழுத் தலைவரும் விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டக் குழுத் தலைவரும் விவசாய, கால்நடை வள, காணி,நீர்ப்பாசன அமைச்சருமான கே.டி. லால் காந்த தலைமையில் “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் வட்டார சபை விசேட மக்கள் சந்திப்பு கண்டி பன்விலையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக வாகன இறக்குமதிகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.
எனினும், நாட்டின் பொருளாதார நிலை படிப்படியாக மேம்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்தளவிலான ஊதியம் காரணமாக, அரச சேவையில் இணைவோரின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது.
கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில், அரச சேவையில் சுமார் பதினைந்து இலட்சம் (15 இலட்சம்) ஊழியர்கள் அதிகமாக இருப்பதாகவும், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அரச உத்தியோகத்தர்களின் பணி நிறைவுக்குப் பின்னர், அவர்களது இறுதிக் காலங்களில் பயன்படும் வகையில் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியச் சலுகைகள் நிறுத்தப்பட்டன.
நிறுத்தப்பட்டிருந்த ஓய்வூதியங்கள் தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மத்திய கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் தொடர்ந்து நிலவி வருகின்றபோதிலும், நாட்டில் எரிபொருள் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து வழங்குவதற்கும், எரிபொருளின் விலையை உயர்த்தாமல் இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்
அரச கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறிய இருவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகள் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டியவை என்பதையும், மக்கள் நலனில் அலட்சியம் காட்ட முடியாது என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து தங்களுடைய பிரதேச அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் முயற்சி செய்ய வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும்.
மக்கள் விழிப்புடன் இருக்கும்போதுதான் நாட்டை எதிர்காலத்தில் கட்டியெழுப்பக்கூடிய வகையில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையாக செலவுகளை மிகவும் குறைத்தும் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம சேவகர்கள் பிரிவுகள் தோரும் ஏற்படுத்தப்படவிருக்கின்ற பனவிலை பிரதேசத்திற்கான வட்டார சபை உறுப்பினர்கள் தெரிவும் இடம் பெற்றது.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். வட்டார சபை உறுப்பினர்களுக்கான தெரிவிலும் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எனப் பலரும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
