சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் திடீரென வெளியேற்றப்பட்டிருப்பது மலையகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியா-உடபுசல்லாவை சென் லெனாட்ஸ் தோட்டத்தில் ஆறு தொழிலாள குடும்பங்கள் சட்ட ரீதியாக ஜூலை 10 வௌியேற்றப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் இப்போது போக்கிடம் இல்லாமல் நிர்க்கதியான நிலையில், தாங்களே பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடுகளுக்கு வெளியே கண்ணீர் மல்க வீடுகளை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறார்கள்.
நமது போராளிகள் இப்போதுதான் வெளியேற்றத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
20 வருடங்களாக தாம் உழைத்துக்கொடுத்த தோட்டம் இப்போது உதைத்து வெளியே தள்ளியிருக்கிறது.
இதையும் படியுங்கள்: வைத்தலாவை தோட்டத்தில் பெண்கள் விழிப்புணர்வு செயலமர்வு
தொழிலாளர்கள் தங்களை மட்டுமே நம்பியிருந்ததால் இப்படி நட்டாற்றில் வீழ்ந்தார்களா, அல்லது தொழிற்சங்கங்கள் கைவிட்டதால், வீழ்த்தப்பட்டார்களா என்பது தெரியவில்லை.
வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது! மலையகத்திற்காக உயிர்கொடுப்போம் என்பவர்கள் என்ன செய்யப்போகிறார்கள். இப்போதைய நிலையை யாருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்க்க முடியாது.



அறிக்கை விடுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.போராட்டம் நடத்துவதால் வீடு கிடைக்கப்போவதில்லை. சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்குப் பாதுகாப்பாக இருந்த ஒரே பகுதியாக மலையகம் விளங்கியதெல்லாம் ஒரு காலம். இப்போது தொழில் உத்தரவாதமோ வாழ்க்கைக்கு உத்தரவாதமோ அற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
மலையக அரசியலின் புது வடிவத்தின் விளைவோ இது?! ஒன்றுமே புரியவில்லை.
இதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கு வழிசமைத்திருக்கும் சென் லெனாட்ஸ் தோட்ட மக்களின் வெளியேற்றம், மலையகம் என்று குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் அரசியல்வாதிகளின் கன்னத்தில் அறைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
மலைக்குருவி
