2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், சபரகமுவை மாகாணம் 74.31 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுத் தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 73.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் இருந்த சபரகமுவை மாகாணம், இவ்வாண்டு இரண்டு நிலைகள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இது கல்வித்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் கடின உழைப்பின் விளைவு எனக் கருதப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் இடைக்கால மதிப்பீட்டின்போது பரீட்சையில் தோல்வியடையும் அபாய நிலையில் இருந்த 16,500-க்கும் மேற்பட்ட மாணவர்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு வருவதில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் 6 பாடங்களில் திறமைச் சித்தி பெற்ற மாணவர்களின் விகிதம் 65.58 சதவீதமாக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் அது 66.89 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தேசிய சராசரியை விட உயர்ந்த தேர்ச்சி விகிதத்தைப் பேணியிருப்பது சபரகமுவை மாகாணத்தின் சிறப்பான சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது.
150 நாள்கள் குறுகிய கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட “அருணெல்லை” (Arunella) திட்டத்தின் முதல் கட்டம் இவ்வெற்றிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது.
குறிப்பாக நீண்ட காலமாக குறைந்த பெறுபேறுகளைப் பதிவு செய்த பாடசாலைகள் கணிசமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.
கிராமப்புற மற்றும் மிகவும் சவாலான பகுதிகளில் உள்ள மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன், தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ் மொழி பாடசாலைகளிலும் பெறுபேறுகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
இது எதிர்காலத்தில் கல்வித் துறையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக வகுப்புகள், மாணவர் முகாம்கள், ஆசிரியர் வழிகாட்டல் திட்டங்கள், செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிகள், பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆசிரியர் மற்றும் அதிபர் பயிற்சிகள், இரவு நேரக் கற்றல் முகாம்கள் மற்றும் மாகாண, வலய, கோட்ட மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நேரடி தலையீடுகள் ஆகியவை இவ்வெற்றிக்கான முக்கியக் காரணிகளாகும்.
இச்சாதனைக்காக சபரகமுவை மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், கல்விச் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலய, கோட்ட கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், வளவழங்குநர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள்,பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த பெறுபேறுகளைப் பெற பாடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டில் “அருணெல்லை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மேலும் வலுப்படுத்தி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை உயர்த்த நடவடிக்கைகள் தொடரப்படும் என சபரகமுவை மாகாண கல்வி அபிவிருத்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்
