நல்லப்ப ரெட்டியார் சீனிவாசகம் சிறந்த தொழிலதிபர் மட்டுமல்லாது சேவையாளராகவும் திகழ்கிறார்.
ஒரு மனிதனின் உண்மையான உயரம் அவர் சேர்த்த செல்வத்தில் அல்ல; அவர் பிறரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய நன்மையில்தான் அளவிடப்படுகிறது.
அந்த வகையில் தொழிலிலும், சமூகப் பணிகளிலும், மனிதநேயத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த பெருமைக்குரியவர் திரு. நல்லப்ப ரெட்டியார் சீனிவாசகம் அவர்கள்.
இவர் மலையக கலை நகரான கண்டி பகுதியில் பிறந்து, ஹட்டன் ,தலவாக்கலை வங்கியோயா பகுதியில் வளர்ந்தார்.
தந்தை திரு. நல்லப்ப ரெட்டியார் அவர்களுக்கும், தாயார் திருமதி நல்லம்மாள் அவர்களுக்கும் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தார். இரண்டு சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் கொண்ட அன்பான குடும்பத்தில் வளர்ந்த இவர், தனது தாயை அவருக்கு ஐந்து வயதாகும் போது இழந்தார்.
தாயை இழந்து தவித்த அவரைத் தன் அண்ணன் திரு ரங்கராஜன் ரெட்டியார் மற்றும் அண்ணி ருக்மணி அம்மாள் ஆகியோர் தம் பிள்ளையைப் போல் வளர்த்தனர்.
தொழிலதிபர் நல்லப்ப ரெட்டியார் சீனிவாசகம் சிறந்த சமூக சேவையாளர்!
நுவரெலியா திரித்துவக் கல்லூரியில் பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.
பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், 1960 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள அப்துல்லா நகைக் கடையில் பணியில் இணைந்து நகைத் தொழிலின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.
தனது உழைப்பு, நேர்மை மற்றும் விடாமுயற்சியின் பலனாக, 1965 ஆம் ஆண்டு தன் அண்ணன் அமரர் நல்லப்ப ரெட்டியார் ரங்கராஜன் அவர்களுடன் இணைந்து கொழும்பு செட்டியார் தெருவில் “தேவி ஜுவல்லரி” என்ற பெயரில் சொந்தத் தொழிலை ஆரம்பித்தார்.
அயராத உழைப்பும், தியாகமும், தொலைநோக்குச் சிந்தனையும் காரணமாக வாடகைக் கட்டடமாக இருந்த வணிகம் பின்னர் சொந்தக் கட்டடமாக உயர்ந்தது.
அதன் பின்னர் அண்ணன் திரு. நல்லப்ப ரெட்டியார் ரங்கராஜன் அவர்கள் தனியாக “ரவி ஜுவல்லரி” நிறுவனத்தை ஆரம்பித்தார்.
இவ்வாறு அண்ணன், தம்பி இருவரும் நகைத் தொழிலில் சிறந்து விளங்கி, நம்பிக்கைக்கும் தரத்திற்கும் அடையாளமாக உயர்ந்தனர்.
தொழிலில் வெற்றி பெற்றதோடு மட்டுமன்றித் தமது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக நலனுக்காக அர்ப்பணித்தார் திரு. சீனிவாசகம் அவர்கள்.
தனிநபர்களின் தேவைகளை அறிந்து பல்வேறு உதவிகளை வழங்கியதோடு, பல தொண்டு நிறுவனங்கள் ஊடாக எண்ணற்ற சமூக சேவைகளையும் நிதி உதவிகளையும் வழங்கி வருகிறார்.
குறிப்பாக, மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக பல மாணவர்களுக்கு கணினிகள் மற்றும் மடிக்கணினிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு மாதாந்திர நிதியுதவிகள் வழங்குவதிலும், அவர்களுக்கு மடிக்கணினிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி, இன்றும் தொடர்ந்து அந்த உயரிய பணியை மேற்கொண்டு வருகிறார்.
இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து இலங்கை மக்களுக்கு அவர் வழங்கி வரும் சேவைகள் அனைவராலும் போற்றத்தக்கவை.
இதையும் படிக்கலாம்: மலையகத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி கல்விப் புரட்சி
1976 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் இணைந்த இவர், ரமேஷ் காந்த் மற்றும் ரதீஷ்காந்த் ஆகிய இரு ஆண் பிள்ளைகளின் அன்புத் தந்தையாகத் திகழ்கிறார்.
எளிமை, பணிவு, நேர்மை, கடின உழைப்பு, மனிதநேயம் ஆகிய உயரிய பண்புகளை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வரும் திரு. நல்லப்ப ரெட்டியார் சீனிவாசகம் அவர்கள்,
தொழிலதிபர் மட்டுமல்ல; பலரின் வாழ்க்கையில் நம்பிக்கையின் ஒளியை ஏற்றிய சமூக சேவையாளரும் ஆவார்.
இவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைகளையும், மனிதநேயப் பணிகளையும் கௌரவிக்கும் இந்த பாராட்டு விழா, அவருடைய வாழ்வின் மகத்தான சாதனைகளுக்கு வழங்கப்படும் தகுதியான அங்கீகாரமாக அமைகிறது.
அவரது சேவைகள் மேலும் பல்லாண்டுகள் தொடர இறைவனை வேண்டி, மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சீனிவாசகம் ரெட்டியார் இரவீந்திரன்
