கல்வி மேற்பார்வை கண்துடைப்பு காரணமாக மலையகக் கல்வியின் மறுபக்கம் ஒளிந்துவிடுகிறது.
கல்வித் திணைக்கள அதிகாரிகள் பாடசாலைகளுக்கு மேற்பார்வைக்காக வருகை தருவது, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காகவே இருக்க வேண்டும்.
ஆனால், பல பாடசாலைகளில் அந்த வருகை ஒரு தரமான கல்வி மதிப்பீடாக இல்லாமல், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
அதிகாரிகளின் வருகை பல சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே பாடசாலை நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தப்படுகிறது.
இதனால், இயல்பான வகுப்பறைச் சூழல் மறைக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட வளாகம், அவசரமாகத் தயாரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர்கள் என ஒரு “காட்சிப்படுத்தல்” உருவாக்கப்படுகிறது.
“டீம் வருதாம்” என்ற வார்த்தையே மாணவர்களிடையே வழக்கமான சொல்லாக மாறியிருப்பது, இந்த நடைமுறை எவ்வளவு சாதாரணமாகிவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்தத் தயாரிப்புகளுக்காக ஆசிரியர்களின் கற்பித்தல் நேரமும், மாணவர்களின் கற்றல் நேரமும் பலியாகின்றன.
சில இடங்களில், அதிகாரிகளின் வருகைக்காக மாணவர்கள் வகுப்புகளை விடுத்து வளாகத்தைச் சுத்தப்படுத்தவும், காட்சிப் பொருட்களைத் தயாரிக்கவுமே பயன்படுத்தப்படுகிறது.
இதேவேளை, கல்வித் திணைக்களங்களில் வளவாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் போன்ற பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பிலும் பல கேள்விகள் எழுகின்றன.
கல்வியியலில் உயர்தரப் பட்டங்களையும் நீண்டகால கற்பித்தல் அனுபவத்தையும் கொண்ட ஆசிரியர்கள் வகுப்பறைகளிலேயே தொடர்ந்தும் பணியாற்றும் நிலையில், அரசியல் செல்வாக்கு,
முன்கூட்டிய அறிவிப்பால் மலையகத்தில் கல்வி மேற்பார்வை கண்துடைப்பு செயற்பாடாக மாறி வருகிறது
தொழிற்சங்க ஆதரவு அல்லது தனிப்பட்ட பரிந்துரைகள் மூலம் சிலர் முக்கிய ஆலோசனைப் பதவிகளை அடைகிறார்கள் என்ற விமர்சனங்கள் நிலவுகின்றன.
சில ஆசிரியர்களின் கூற்றுப்படி, தாங்கள் நிபுணத்துவம் பெறாத பாடங்களுக்கே சிலர் ஆலோசகர்களாகச் செயற்படுகின்றனர்.
சமகாலக் கற்பித்தல் முறைகள் குறித்து போதிய அறிவு அல்லது தொடர்ச்சியான தொழில்முறைப் பயிற்சி இல்லாமலேயே, பல ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த அணுகுமுறைகளைக் கொண்டு
இன்றைய வகுப்பறைகளை மதிப்பிட முயல்கிறார்கள் என்பதும் கல்வித்துறையில் பேசப்படும் குற்றச்சாட்டாகும்.
தூரப் பிரதேசப் பாடசாலைகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்காக ஆசிரியர்களின் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துமாறு கோரப்படுவது, மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களின்
கற்பித்தல் திறனை இழிவுபடுத்தும் வகையில் கருத்துரைக்கப்படுவது, இடமாற்றம் போன்ற நிர்வாக அதிகாரங்களை அச்சுறுத்தலாகப் பயன்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகளும் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன.
இதனால், தங்களது தொழில்முறை சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல ஆசிரியர்கள் உணர்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடி நிலவும் காலத்திலும், அதிகாரிகளின் வருகைக்காக ஆசிரியர்கள் தங்களது சொந்தப் பணத்தில்
கற்றல் உபகரணங்களைத் தயாரிப்பதும், மாணவர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டிய சூழல் உருவாவதும் கவலைக்குரியதாகும்.
சில இடங்களில், அதிகாரிகளுக்கான உபசரிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், அதன் சுமை பெற்றோரின் தோள்களில் விழுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மாணவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை
அதிகாரிகளின் வருகைக்குப் பின்னர் நடைபெறும் மதிப்பாய்வுக் கூட்டங்களில், பெரும்பாலும் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் புள்ளிவிவரங்களே விவாதிக்கப்படுகின்றன.
ஆனால், மாணவர்களின் கற்றல் சவால்கள், சமூக-பொருளாதாரப் பின்னணி, வளப்பற்றாக்குறை, மனநலப் பிரச்சினைகள் போன்ற அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
இந்த அழுத்தம் இறுதியில் மாணவர்கள் மீதே விழுகிறது. குறைந்த பெறுபேறுகள் காரணமாக அவர்கள் பெற்றோர் முன்னிலையில் கண்டிக்கப்படுகிறார்கள்;
பெற்றோர்களும் முழுமையான தகவல் இல்லாமல் பிள்ளைகளைத் தண்டிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால், மாணவர்கள் கல்வி மீதான நம்பிக்கையை இழந்து, பாடசாலையிலிருந்து மனதளவில் விலகும் அபாயம் உருவாகிறது.
இந்த நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டும் வகையில், நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம்–2 இல் அமைந்துள்ள ஒரு பாடசாலையில்,
இவ்வாறான சூழல்களால் ஆறு மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர்.
மேலும் படிக்க: பெற்றோர் கேள்வி கேட்டால் அவர்கள் மீது அவதூறு பரப்பலாமா?
கல்வி என்பது மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அமைப்பாக இருக்க வேண்டுமே அன்றி, அவர்கள் கல்வியை விட்டு விலகும் நிலையை உருவாக்கும் அமைப்பாக மாறக்கூடாது என்பதே கல்வியாளர்களின் வலியுறுத்தலாகும்.
கல்வியை விட்டு வெளியேறும் ஒவ்வொரு மாணவரும் ஒரு தனிநபரின் இழப்பாக மட்டுமல்ல; அது நாட்டின் மனித வள இழப்பாகும். கல்வி அமைப்பின் நோக்கம் மாணவர்களை அச்சுறுத்துவதோ
அல்லது கண்காட்சிக்காகத் தயாரிப்பதோ அல்ல; அவர்களின் திறமைகளை வளர்த்து, சுயநம்பிக்கையுடன் சமூகத்திற்குள் வழிநடத்துவதாக இருக்க வேண்டும்.
எனவே, கல்வி மேற்பார்வை முறைமை வெளிப்படையானதாகவும், தகுதி அடிப்படையிலானதாகவும், மாணவர் நலனை மையமாகக் கொண்டதாகவும் மாற்றப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
திறமைக்கு மதிப்பளிக்கும் நியமனங்கள், ஆசிரியர்களின் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்கும் நிர்வாகம்,
மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் கல்விச் சூழல் ஆகியவை உருவாக்கப்படும்போதுதான் கல்வியின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
கல்வித்துறையின் குறைகளைப் பேசுவது கல்வியை விமர்சிப்பதற்காக அல்ல; அதைச் சீர்திருத்துவதற்காக. மௌனத்தை உடைத்து, பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நேரம் இதுவே.
வினோதினி பாலசுப்பிரமணியம்
