சென் லெனாட்ஸ் மக்களுக்கு மாற்று ஏற்பாடு அவசியம் செய்துகொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராகலை சென் லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட ஆறு குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
ஆறு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டமை கவலைக்குரியது. ஒரே பொழுதில் அவர்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சென் லெனாட்ஸ் மக்களுக்கு மாற்று ஏற்பாடு அவசியம்.
நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கின்ற; ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை இந்தச் சம்பவத்திற்கு மனிதாபிமான செயற்பாடும் அவசியம் என்று திகாம்பரம் எம்பி குறிப்பிட்டுள்ளார்.
தோட்ட முகாமைத்துவம் இந்த விடயத்தில் அசமந்தபோக்கில் இருந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ஜனவரி மாதம் வந்துள்ள நிலையில் உரிய தரப்பினருக்கு ஆறு மாதம் கடந்தும் தகவலை வழங்காமல் இருந்தது அவர்களுடைய மேம்போக்கான தனத்தினை வெளிப்படுத்துகிறது.
இதையும் படியுங்கள்: சென் லொனாட்டஸ் தோட்ட மக்கள் திடீரென வெளியேற்றம்
பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு சொந்தமான காணிகளில் அவர்களின் அனுமதி இன்றி ஏதாவது கட்டடங்களை நிர்மாணிக்கின்ற பொழுது; குடியேறுகின்ற பொழுது அப்பாவி மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர்.
இருந்தாலும் இன்று தோட்டத் தொழிலாளர்கள் இருப்பிடங்கள் இன்றி காணப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு உடனடியான மாற்று நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஏதாவது ஒரு வீடமைப்பு திட்டத்தின் ஊடாக அவர்களுக்கு உடனடியாக குடியிருப்புகளை வழங்க நடவடிக்கையினை அரசாங்கமும் அமைச்சும் முன்னெடுக்க வேண்டும்.
அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
கௌசல்யா
