புசல்லாவை றொச்சைல்ட் தோட்டத் தொழிலாளர்கள் அறுவர் கடந்த 17ஆம் திகதி முதல் இன்று 19ஆம் திகதி மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக சுமார் 350 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூன்று நாளாகத் தொடரும் போராட்டத்தைத், தோட்ட நிர்வாகமோ, அரசியல்வாதிகளோ கண்டுகொள்ளவில்லை என்று, றொச்சைல்ட் தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம், தித்வா புயல் தாக்கத்தின்போது நிவாரணம் வழங்குவதில், பாரபட்சம் காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தோட்ட நிர்வாகத்துன் எழுந்த சர்ச்சையின் நீடிப்பாகக், கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல், ஐவருக்கு வேலை நிறுத்தம் செய்வதாக, நிர்வாகம் கடந்த 12 ஆம் திகதி, எழுத்து மூலம் அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து றொச்சைல்ட் தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் ஐநூற்று 50 தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தொடங்கியதாகத், தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர், கே. சண்முகராஜ், மலைக்குருவியிடம் தெரிவித்தார்.

பின்னர் 17ஆம் 18 ஆம் திகதிகளில், பிளக்போரஸ்ட், ஜீ.எல் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிலுக்குத் திரும்பியுள்ளனர். 17 ஆம் திகதி முதல், அறுவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு ஆதரவாக ஓஆர்சி, வைஆர்சி பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் 350 தொழிலாளர்கள், இன்று 19 ஆம் திகதி முதல், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, மூவருக்கு மாத்திரம், மீண்டும் வேலை வழங்கத் தயார் என்று, நிர்வாகம் அறிவித்திருக்கிறது. என்றாலும், வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐவரையும், மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது, ஒட்டுமொத்த தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.

தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அனைத்து உடைமைகளும் தோட்டத்திற்கே உரிமை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் திரு. சண்முகராஜ் கூறுகிறார்.
“தோட்ட வாகனத்தில் நிவாரணம் கொண்டு வரவும் தொழிலாளர்களுக்கு இல்லையா? என்று கேட்டோம். அதற்கு, “உங்களுக்கெல்லாம் கிடையாது! இது எமது மக்களுக்கு” என்று பெரும்பான்மையின நபர் ஒருவர் தெரிவித்தார். அதன்பின், தோட்ட வாகனத்தைப் பயன்படுத்துவது பற்றிக் கேட்டபோது, அது வாடகைக்கு பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.தோட்ட வாகனத்தை வாடகைக்குக் கொடுக்க முடியுமா? என்று கேட்டபோதுதான் துரையுடன் பிரச்சினை உருவானது. இந்த வாய்த்தர்க்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. எமக்கு எதிராக துரை தாக்கல் செய்த வழக்கு கடந்த 10 ஆம் திகதி நடந்தது.அந்த வழக்கிற்குப் பின்னர்தான் வேலைநிறுத்தம் செய்வதாகத் துரை அறிவித்தார்.அடுத்த வழக்கு விசாரணை செப்டம்பர் 9 ஆம் திகதி இருக்கிறது ” என்று விபரிக்கிறார் சண்முகராஜ்.
தொழிலாளர்கள் துரைக்கு எதிராகத் தாக்கல் செய்திருக்கும் வழக்கு விசாரணை ஜூன் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.
றொச்சைல்ட் தோட்ட வரலாற்றில், இவ்வாறான சம்பவம், முதற்தடவையாக நடப்பதாகவும் அவர் கூறுகிறார். புசல்லாவை பிளாண்டேசனுக்குச் சொந்தமான, இந்தத் தோட்டத்தின், முன்னைய நிர்வாகங்கள், இவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்றும் தொழிலாளர்கள், சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஓரிடத்தில் போராட்டம் நடந்தால், அங்கு உடனடியாகப் பொலிஸார் செல்வார்கள். மக்கள் பிரதிநிதிகள் வருவார்கள். ஆனால், இங்கு உண்ணாவிரதம் இருக்கும் மக்கள், அநாதரவாகவிடப்பட்டுள்ளதாக, ஆதங்கம் தெரிவிக்கின்றார்கள்.
புசல்லாவை றொச்சைல்ட் தோட்ட மக்களின், குறைகளைத் தீர்த்துவைப்பது யார்? உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, என்ன பாதுகாப்பு என்பதே, புசல்லாவைப் பகுதியில் மட்டுமன்றி, முழு பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வி. அருள்செல்வன், கௌசல்யா
