மீண்டும் ஒரு மே தினம் வருகிறது! ஆனால், பதுளை யூரி தோட்டம் முதல் கோணகலை தற்காலிக முகாம்கள் வரை, கம்மடுவை, நீலகாமம் என புயலினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் இன்னும் ஒரு துண்டு நிலமின்றி அகதிகளாக வாழ்கின்றனர்.
மே தினங்கள் இன்று வெறும் “கூத்துக்களாக” மாறிவிட்டன!
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், இன்று மலையகத்தில் வெறும் அரசியல் பலத்தை நிரூபிக்கும் ஊர்வலங்களாகவும், மேடை ஆட்டங்களாகவும் சுருங்கிவிட்டது.
மலையகத்தில் இன்று இருக்கும் மிகப்பெரிய வெற்றிடம்:
கொள்கை மிக்க தொழிற்சங்கம்: அரசியல் இலாபங்களுக்காகத் தொழிலாளர் நலனை அடகு வைக்காத, சமரசமற்ற ஒரு தொழிற்சங்கக் கொள்கை இன்று இல்லை.
தியாகமிக்க தலைமை:
பதவிகளுக்காகவும், அமைச்சுப் பொறுப்புகளுக்காகவும் தங்களை விற்றுக்கொள்ளாத, மக்களுக்காக எதையும் இழக்கத் துணியும் உண்மையான தலைமைத்துவத்தின் பற்றாக்குறை.
தொழிற்சங்கம் என்பது ஒரு அரசியல் கட்சியின் கிளை அமைப்பாக இல்லாமல், தனித்துவமான “பேரம் பேசும்” சக்தியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே எந்தவோர் அரசியல் தலைமையையும் பணிய வைத்து, எமது மக்களின் நிலவுரிமையை உறுதிப்படுத்த முடியும்.
வாழ்வதற்கு நிலமில்லை, இறந்தால் புதைப்பதற்கு இடமில்லை – இந்த அவலங்களுக்குக் கண்ணீர் விடுவதை விடக், கொள்கை உறுதிமிக்க தொழிற்சங்கக் கட்டமைப்பை உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவை.
மே தினங்கள் மேடைப் பேச்சுகளுக்காக அல்ல… அது எமது மண்ணுக்கான போராட்டத்திற்காக!
வேலு இந்திரசெல்வன்
