மலையகத்தைப் பிறப்பிடமாக கொண்ட மலைநாட்டின் பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்ராகவன் இன்று மே 29 பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இராகலை உயர் பாடசாலை, தலவாக்கலை தமிழ்த் தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர்,சிறு வயதிலேயே இசைத் துறையில் ஆர்வங்கொண்டு மேலைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம் போன்றவற்றை அடிப்படையாகக் கற்றுக்கொண்டவர்.
1994 ஆம் ஆண்டு தனது பாடசாலை நண்பர்களுடன் “சப்தா” என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்தார். இந்தப் பெயர் பிற்காலத்தில் FANTASY என்று பெயர் மாற்றப்பட்டு கடந்த 32 வருடங்களாக வெற்றி நடை போடுகின்றது.
FANTASY இசைக்குழு நிரந்தரமான இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் கொண்டுள்ளது. வானொலியில், தொலைக்காட்சி, மேடை, பக்தி எனப் பல வெற்றிகரமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
1998 ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பொதுவான ஓகன் வாசித்தல் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமைக்காக BMICH மண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இந்தப் போட்டி அப்போது தமிழ், சிங்கள மொழிகளுக்கு பொதுவாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் கொழும்புவில் சிவகுமாரின் அக்னி இசைக்குழுவில் பல வருடங்கள் ஓகன் வாத்தியக் கலைஞராக இருந்து பல வெற்றிகரமான இசை நிகழ்ச்சிக்குத் தனது பங்களிப்பை வழங்கினார். தொழில் நிமித்தம் அங்கிருந்து விலகி பகுதி நேரமாக இசைக்குழுவை நடத்தி வருகிறார்.
இவரது இசைத்துறையைப் பாராட்டி 2010 ஆம் ஆண்டு ஊவா மாகாண தேயிலை தின நிகழ்ச்சியில் ‘கலைமாமணி’ விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
கொழும்புக்குச் சென்றால்தான் இசை அமைக்க முடியும் என்ற தேவையில்லை; தோட்டத்திலும் முடியும் என நிருபித்துள்ளார். இதனால் இவருக்கு மலையக இசையமைப்பாளர் என்ற அடைமொழியும் உள்ளது.
கௌசல்யா
