ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய கால்பந்துத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பையை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின.
23-வது உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பல முன்னணி அணிகள் எதிர்பாராத விதமாக லீக் சுற்றிலும் நாக்-அவுட்டிலும் வெளியேறின.
அதே நேரத்தில், அறிமுக அணிகளான கேப் வெர்டே போன்ற அணிகள் வலிமைமிக்க பெரிய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தன.
இருமுறை சாம்பியனான உருகுவே லீக் சுற்றிலேயே வெளியேற, நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி 2-வது சுற்றிலும், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் 3-வது சுற்றிலும் தொடரை விட்டு வெளியேறியது.
அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் தனது 2 ஆவது உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொருபுறம், இங்கிலாந்தை தோற்கடித்த நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, 7-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் ஜாம்பவான் 39 வயதான மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை எனக் கருதப்பட்டதாலும், இளம் வீரர்கள் லாமின் யாமல் உள்ளிட்ட நட்சத்திர
வீரர்கள் ஸ்பெயின் அணியும் மோதிக்கொண்டதால் இந்த ஆட்டத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பட்டம் வெல்வதற்கான மோதலில் நான்காவது பட்டத்தை வெல்லும் முனைப்பிலும், வெற்றியுடன் விடைபெற வேண்டும் முனைப்பில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் மெஸ்ஸியும்,
2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கிய ஸ்பெயினும் மோதின.
இந்த மோதலில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தைச் சூடியது
1930-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உருகுவே மற்றும் ஆர்ஜென்டீனா அணிகள் மோதியிருந்தன.
அதன்பிறகு, தற்போது 96 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பானிஷ் மொழி பேசும் இரண்டு நாடுகள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்பதால், எதிர்பார்ப்பு அதிகமானது.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட் லைஃப் கால்பந்து திடலில், பிஃபா இறுதிப் போட்டி திங்கள்கிழமை (20-ஆம் தேதி) அதிகாலை 12.30 தொடங்கியது.
இருநாட்டு தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டு, போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ,
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் சிறப்புரையாற்றினார். மேலும், போட்டியைக் காண நடிகர் மேட் டாமன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஸ்பெயின் ஜாம்பவான் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா ஃபிஃபா உலகக் கோப்பைக் கோப்பையை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
ஆட்டம் தொடங்கியது முதலே நடப்பு சாம்பியன் அணியான ஆர்ஜென்டீனாவுக்கு ஸ்பெயின் அணி கடுமையான சவால் அளித்தது.
போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணியின் நட்சத்திரம் லாமின் யாமல் அடித்த ஷாட்டை ஆர்ஜென்டீன கோல்கீப்பர் மார்டினஸ் அட்டகாசமாகத் தடுத்தார்.
ஆட்டத்தின் முதல் 15 நிமிஷத்தில் 67 சதவிகிதம் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் அணி. இரு அணிகளும் கடுமையாக மோதினாலும், முதல் பாதியில் இரு அணிகளாலும் ஒரு கோல்கூட போட முடியவில்லை.
முதல் பாதியான 45 நிமிஷத்துடன் கூடுதலாக ஸ்டாபேஜ்க்காக 4 நிமிஷங்கள் கொடுக்கப்பட்டன.
ஆனாலும் இரு அணிகளாலும் கோல்கள் போட முடியவில்லை. நடப்பு தொடரில் முதல் பாதியில் குறைவான ஷாட்டுகள் அடிக்கப்பட்ட ஆட்டமாகவும் இது அமைந்தது.
ஸ்பெயின் அணி மொத்தமாக 3 ஷாட்களை அடித்தது. லாமின் யாமல் மற்றும் மிக்கேல் ஓயர்சபல் ஆகியோர் தலா ஒரு ஷாட் அடித்தாலும் ஆர்ஜென்டீன கோல்கீப்பர்
மேலும் படிக்க: பிஃபா இறுதிப்போட்டி: ஆர்ஜென்டியா -ஸ்பெயின் மோதல்
மார்டினஸ் சாதுர்யமாக பாய்ந்து அதனைத் தடுத்து அசத்தினார். அதே வேளையில், முதல் பாதியில் லியோனல் மெஸ்ஸி ஒரு ஷாட்கூட அடிக்கவில்லை.
ஸ்பெயின் அணி 51 சதவிகிதமும், ஆர்ஜென்டீனா அணி 45 சதவிகிதமும் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
முதல் பாதியின் இடைவேளையில், பிரபல பாடகர்கள் ஜஸ்டின் பைபர், ஷகீரா, பிடிஎஸ் (BTS) குழுவினர் ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
கோல் அடிக்க ஈரணிகளும் திணறல்
இரண்டாவது பாதி தொடங்கி, ஆட்டத்தின் 90-வது நிமிஷங்கள் வரையிலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
90+2 ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீன வீரர் என்ஸோ ஃபெர்னாண்டஸ், ஸ்பெயின் வீரர் பாவ் குபார்சி மீது பலமாக மோத, இரண்டு மஞ்சள் அட்டையைப் பெற்ற ஃபெர்ணாண்டஸுக்கு
சிவப்பு அட்டை வழங்கப்பட்டு, அவர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஆர்ஜென்டீன அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதன்பின்னர், கிடைத்த வாய்ப்பிலும், கோல் போஸ்ட்டை நோக்கி லாமின் யாமல் அடித்த அட்டகாசமான ஷாட்டை மார்ட்டினஸ் அசாத்தியமாகப் பறந்து தடுத்தார்.
கூடுதல் நேரமான 95-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் அணி வீரர் நிக்கோ வில்லியம்ஸ் கோல் போட்டார்.
ஆனால், அந்த கோலை நடுவர் நிராகரித்து விட்டார். அதைத்தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க, கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் 106-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ்
தனது தலையால் தட்டிக்கொடுத்த பந்தை, பெர்னாண்டோ டோரஸ் அசத்தலாக கோலாக மாற்றினார்.
இதனால், ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மேலும், ஆதிக்கத்தைத் தொடர்ந்த ஸ்பெயின் அணி 108-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலையும் நடுவர் நிராகரித்தார்.
ஆட்டத்தின் 120 நிமிஷங்கள் முடிவில், 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கியது.

இதன் மூலம் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயின் அணி தனது 2-வது உலகக் கோப்பை பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.
மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை போட்டியாகக் கருதப்பட்ட நிலையில், ஸ்பெயின் அணியின் சூப்பரான தற்காப்பு ஆட்டத்தால் ஆர்ஜென்டீனாவால் ஒரு கோல்கூட போட முடியவில்லை.
வெற்றிக் கோப்பையுடன் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் கனவு தகர்ந்தது. யூரோ 2024 சாம்பியனான ஸ்பெயின், தற்போது உலகக் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.490 கோடியும் அதனுடன் தங்கப்பதக்கமும், 2ஆம் இடம் பிடித்த ஆர்ஜென்டீனா அணிக்கு ரூ.325 கோடியும் வெள்ளிப்பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
