நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டுள்ளது.
கடந்த நான்கு நாள்களாக மதிய வேளையில் இவ்வாறு கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் பண்ணையாளர்கள்,பாடசாலை மாணவர்கள் தங்களது அன்றாட செயல்பாடுகளைச் செய்ய முடியாதுள்ளது.
பண்ணையாளர்கள் தங்களது வளர்ப்பு ஆடு மாடுகளுக்கு தீவனமாக கருதப்படும் புல் வெட்டி எடுத்து வர முடியாதுள்ளது. அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தங்களின் விவசாயப் பயிர்களை பாதுகாக்க முடியாது வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதிய வேளையில் கன மழை பெய்து வருவதால் பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்து இல்லங்களுக்கு செல்லும் போது முழுமையாக நனைந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய கன மழையுடனான காலநிலை ஏற்பட்டுள்ளதால் பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண் பெண் இருபாலரும் மிகவும் பீதியுடன் தங்களது தொழிலைச் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் .
அதிகளவில் பனி மூட்டம்
நுவரெலியா பகுதியில் அதிக பனி மூட்டம் நிலவுவதால் அனைத்து வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறும் வாகனங்களில் உள்ள முகப்பு விளக்கை ஒளிரச் செய்து வாகனங்களை ஓட்டிச் செல்லுமாறு நுவரெலியா மாவட்ட வாகன போக்குவரத்து பிரிவின் உயர் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

