விக்டன் தோட்டப் பாதையை விரைந்து சீர்படுத்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹற்றன் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கடும் மழையால்
விக்டன் தோட்டத்திற்க்குச் செல்லும் பிரதான பாதை மிகவும் சேதமடைந்து
போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹற்றனில் இருந்து ருவன்புர ஊடாக விக்டன் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சீமெந்து பாலத்தின் ஒரு பகுதி, உடைந்துள்ளது.
இதனால், இந்தப் பாதையில் சேவையில் ஈடுபடும் ஐந்து தனியார் பஸ்கள் பாலம் சேதமடைந்துள்ள பகுதி வரையில் மாத்திரமே இயக்கப்படுகின்றன. ஆதலால் விக்டன் தோட்டத்தின் ஐந்து பிரிவுகளிலும் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப் பாலம் ஏற்கனவே பலமுறை சேதமடைந்துள்ளதாகவும் முன்னர் தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தற்காலிகமாகச் சீரமைத்து பஸ் போக்குவரத்தை முன்னெடுத்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் எவரும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் விக்டன் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



பாலம் சேதமடைந்த பகுதியிலேயே பேருந்து சேவை நிறுத்தப்படுவதால், அங்கிருந்து விக்டன் தோட்டப் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் தோட்டத்திலிருந்து பாலம் சேதமடைந்த இடம் வரை முச்சக்கர வண்டியில் பயணிக்க அதிக அளவில் கட்டணம் அறவிடப்படுகிறது.
தேர்தல் காலங்களில் சேதமடைந்த பாலத்தை புதிதாக நிர்மாணித்துத் தருவதாக அரசியல்வாதிகள் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனத் தோட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சேதமடைந்த பாலத்தை உடனடியாகப் புனரமைப்பதுடன், எதிர்காலத்தில் மீண்டும் பாதிக்கப்படாத வகையில் நிலையான புதிய பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு விக்டன் தோட்ட மக்கள் அரசியல்வாதிகளிடம் கோருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
