மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இன்று 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் பணிப் பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வந்த நோயாளர்கள் அவதியுற்று வீடு திரும்பினர்.
வெளிநோயாளர் பிரிவைத் தவிர்ந்த ஏனைய அனைத்துச் சேவைகளும் இடம் பெற்று வருகின்றன.
கடந்த 28 ஆம் திகதி முதல் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை நோயாளர் பார்வையிடும் நேரம் முடிந்த பின்னர் வந்தவர்கள் சிகிச்சை அறையில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது பெண் உத்தியோகத்தர் ஒருவர் நோயாளிகள் பார்க்கும் நேரம் முடிந்த விட்டதால் தகாத முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து அந்தப் பெண் ஊழியரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்க முற்பட்டுள்ளனர்.
அது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்து உள்ளபோதிலும் இன்றைய தினம் வரை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை.
இதனால்,இந்தப் பணிப் பகிஸ்கரிப்பை மேற் கொண்டு வருவதாகவும் கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதால் அதனைக் கண்டிப்பதற்காகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி பெருமாள்



