புசல்லாவை – புப்புரஸ்ஸை டெல்டா வடக்கு (டேசன்) தோட்ட மக்கள் தமது பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள குடியிருப்புத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமது பணியைப் புறக்கணித்து கிளர்ந்தெழுந்தனர்.
புப்புரஸ்ஸைப் பகுதியிலுள்ள 15 குடும்பங்களுக்கு டேசன் தோட்டத்திலுள்ள அரச காணிகளை ஒதுக்கி வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் முற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் தமது பணிகளை நிறுத்தி தேயிலை மலையிலிருந்து கீழிறங்கி ஒன்று கூடி கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் நேற்று ஏப்பிறல் 29 இடம்பெற்றது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட தித்துவா புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, புப்பரஸ்ஸைப் பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.
அதன் விளைவாக, டேசன் தோட்டத்தைச் சேர்ந்த 22 குடும்பங்கள் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கியிருந்து அதன் பின்னர் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தமக்கு வீடுகள் அமைத்துத் தர வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரி வருகின்ற நிலையில், வீடமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் புப்புரஸ்ஸை பகுதியிலுள்ள 15 குடும்பங்களுக்கு டேசன் தோட்டத்திலுள்ள அரச காணிகளை ஒதுக்கி வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் முற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
தமக்கும் வீடுகளை அமைத்துத் தருமாறு மக்கள் தமது பணிகளை நிறுத்தி தேயிலை மலையிலிருந்து கீழிறங்கி ஒன்று கூடி கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். ஒரு சில மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீண்டும் தமது பணிகளை மேற்கொண்டனர்.
தித்துவா புயலினால் பாதிக்கப்பட்ட டேசன் தோட்ட மக்களுக்கு வீடமைத்து தரப்படும் என்று பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் தெரிவித்திருந்தார்
எனினும், இதுவரை தோட்ட மக்களுக்கு வீடமைக்கும் எந்தத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்களுக்கும், டெல்டா பிரதேசத்தில் வீடமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தோட்ட மக்களை பாரபட்சமாக நடத்தும் செயல் என்பது அப்பட்டமாகத் தெரியவருகிறது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதிகளும் பாரபட்சமாக செயல்படுகின்றனர் என்பதும், தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை உண்மையாக நிறைவேற்றப்படவில்லை என்பதும் இதன் மூலம் வெளிப்படையாகத் தெரியவருகிறது என்று இப்பிரச்சி ன குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திர மலையக தொழிற்சங்கத்தின் செயலாளரும் உடபளாத்தை பிரதேச சபை உறுப்பினருமான மயில்வாகனம் கவாஸ்கர் கூறினார்.
புப்புரஸ்ஸ டெல்டா வடக்கு (டேசன்)தோட்ட மக்களுக்களின் கோரிக்கை அரசாங்கம் செவிசாய்க்குமா?…
பன்விலை நிருபர் ம. நவநீதன்
