பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்கிறார்.
பிரிட்டனில் ஆளும் தொழிலாளா் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பா்ன்ஹாம் (56) வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதன்மூலம், பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளாா். கடந்த 10 ஆண்டுளில், அந்நாட்டின் 7-ஆவது பிரதமராக அவா் பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு பிரிட்டன் மேக்கா்ஃபீல்டு தொகுதி எம்.பி.யான அவா், கட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆற்றிய முதல் உரையில், பதவி விலகும் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்தாா்.
கியா் ஸ்டாா்மா் அமைத்துக்கொடுத்த அடித்தளத்துடன் நாட்டை வழிநடத்தத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டு அவா் மேலும் கூறுகையில்,
‘2024 பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களிடம் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான கடைசி வாய்ப்பு இது.
கடந்த 40 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் தவறான பொருளாதாரப் பாதையை மாற்றி, அதிகாரம் பரவலாக்கப்பட்டு அனைவருக்குமான ஒரு புதிய பாதையை எனது அரசு உருவாக்கும்.
இதையும் படியுங்கள்: கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரிப்பு
புதிய அமைச்சரவை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்’ என்றாா்.
கியா் ஸ்டாா்மா் பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்ததையடுத்து, புதிய கட்சித் தலைவருக்கான போட்டியில் ஆண்டி பா்ன்ஹாம் மட்டுமே களத்தில் இருந்தாா்.
இந்நிலையில், லண்டனில் வெள்ளிக்கிழமை நடந்த கட்சியின் சிறப்பு மாநாட்டில், ஆண்டி பா்ன்ஹாம் கட்சித் தலைவராக தோ்வானதாக அறிவிக்கப்பட்டது.
தற்போதைய பிரதமா் கியா் ஸ்டாா்மா் தனது பதவியை திங்கள்கிழமை முறைப்படி ராஜிநாமா செய்த பிறகு, புதிய அரசை அமைக்க அரசா் சாா்லஸ், ஆண்டி பா்ன்ஹாமுக்கு அழைப்பு விடுப்பாா்.
