மட்டக்குளி விபத்துக்குக் காரணம் நானன்று கார்ச் சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொழும்பு மட்டக்குளியில் நேற்று முன்தினம் (16) இரவு சுமார் 8:30 அளவில் இடம்பெற்ற கோரமான விபத்திற்குக் காரணம் அந்தக் கார்தான் என்று அதனை ஓட்டிச்சென்ற 52 வயது நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கார் தானாகவே படுவேகமாக முன்னோக்கிச் சென்றதாகவும் தான் எதுவும் செய்யவில்லை என்றும் தன்னால் காரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் அப்பாவித்தனமாகத் தெரிவித்துள்ளார்.
இவரது கூற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறிய பொலிஸார் குழு அமைத்து விசாரிக்கவுள்ளனர்.
இந்த விபத்தில் மூவர் உயிரிழந்து,மேலும் 12 பேர் காயமடைந்தனர். (முழு விவரம் கருத்துப் பகுதியில்)
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் தனது மகளைப் பிரத்தியேக வகுப்பிலிருந்து அழைத்து வரச் சென்றிருந்த இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளின் தந்தையான சந்திரசேகர் (வயது 44) உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.
கார்ச் சாரதி போதை பயன்படுத்தியிருந்ததாகக் கண்டறியப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், அது போதையன்று ஆயுள்வேத மருந்து என்று சாரதியின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
எனவே, கார்ச் சாரதியின் கவனவீனத்தை நிரூபிப்பதில் பொலிஸாருக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
கௌசல்யா
