மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக பராபவ தமிழ் புத்தாண்டு அமையட்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டையொட்டி அவர் வாழ்த்துச் செய்தியை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:
நமது வாழ்வில் பொறுமையும் நம்பிக்கையும் மிக அவசியமான இந்த காலகட்டத்தில் மலரும் தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டு, மக்களின் இடர்களையும் துயரங்களையும் நீக்கி, புதிய நம்பிக்கையை வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்-சிங்கள புத்தாண்டு நம் அனைவரின் மாபெரும் கலாசார பெருவிழாவாகும் என்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று, சமூக,கலாசார மரபுகளை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான நிகழ்வாகவும் இது திகழ்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நம் நல்லெண்ணங்களையும் இலக்குகளையும் அடைவதற்கான ஒரு புதிய தொடக்கமாக அமைகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 ஆம் ஆண்டின் பராபவ தமிழ் புத்தாண்டு, நாட்டின் அனைத்து மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி, அமைதி, சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டி தனது இதயம் கனிந்த வாழ்த்துகளை ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெ. கோபிநாத்
ஊடகச் செயலாளர்
