தோட்டப் பாடசாலைகளில் நீர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவிகள் 3 நாள் சிரமப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையகத்திலுள்ள தோட்டப் பாடசாலைகளில் நீர் பற்றாக்குறை நிலவுவதால் மாதவிடாய் காலங்களில் மாணவிகளின் வருகை குறைந்துவிடுவதாக கண்டி சமூக மேம்பாட்டு நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையின் தோட்டப் பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளில், போதிய சுகாதார வசதிகளும், நம்பகமான நீர் விநியோக முறைகளும் இல்லாத காரணத்தால், மாணவிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐஎஸ்டி என்கின்ற சமூக மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதவிடாய் காலங்களில் மாணவிகளின் பாடசாலை வருகையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாகவும், பல பாடசாலைகளில் நீர் வசதி இல்லாததே இதற்கான முக்கிய காரணமாக இருப்பதாகவும் ISD சுட்டிக்காட்டியுள்ளது.
ISD நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம், ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவிக்கையில், மலைப்பாங்கான தோட்டப் பகுதிகளில் நீர் வளங்கள் காணப்பட்டாலும்,
அவற்றைச் சுத்திகரித்து உள்ளூர் மக்களுக்கு முறையாக விநியோகிப்பதில் பெரும் குறைபாடுகள் நிலவுவதாகக் கூறினார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சில நீர் விநியோகத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அவை பெரும்பாலும் ஒரு தோட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டுமே
மட்டுப்படுத்தப்படுவதாகவும், இதனால் பல தோட்டக் குடியிருப்புகள் தொடர்ந்தும் அடிப்படை நீர் வசதியின்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டாயிரத்து 24, இரண்டாயிரத்து 25 ஆண்டுக்கான “மீள்திறன் கட்டியெழுப்புதல், உள்ளடக்கிய வளர்ச்சி,முழுமையான மாற்றம்” (Building Resilience, Inclusive Growth and Holistic Transformation)
குடும்பக் கணக்கெடுப்புத் தரவுகளை மேற்கோள் காட்டிய முத்துலிங்கம், தோட்டக் குடும்பங்களில் 68 சதவீதமானவை ஏதாவது ஒரு வகையில் நீர் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
“இந்தப் பிரச்சினையால் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். வீட்டுத் தேவைகளுக்காக அவர்கள் ஓடைகள் அல்லது தொலைதூர இடங்களுக்குச் சென்று நீரை எடுத்துவர வேண்டியுள்ளது.
நீர் இல்லாதபோது கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் சிரமமாகிறது,” என அவர் தெரிவித்தார்.
மேலும், நீர் பற்றாக்குறையால் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சில பாடசாலைகளிலும் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதையும் வாசிக்கலாம்: கல்வி மேற்பார்வை கண்துடைப்பு: ஒளியும் மறுபக்கம்
சில ஆசிரியர்கள் மாணவர்களிடம் வீட்டிலிருந்து நீரை எடுத்துவந்து சேமிக்குமாறு கோருகின்ற போதிலும், அது நீடித்த தீர்வாக அமையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நீர் வசதிகள் இல்லாத காரணத்தால் சில மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். இது அவர்களின் கல்வி தொடர்ச்சியையும் பாதிக்கிறது,” என முத்துலிங்கம் தெரிவித்தார்.
தோட்டப் பகுதிகளில் சுகாதார வசதிகள், குடிநீர் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு குறைபாடுகள் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளாகும்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தாலும், இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படவில்லை என சமூகத் தரப்புகள் தெரிவிக்கின்றன.
ஆங்கில மூலம்: தி மோர்னிங்
தமிழில்: வினோதினி பாலசுப்பிரமணியம்
