இலங்கை வரலாற்றில் தொழிற்சங்கப் போராட்டமின்றி அரச ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கிய ஒரே அரசாங்கம் தமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே என்று பொது நிர்வாகம், மாகாணசபைகள்,உள்ளுராட்சி அமைச்சர் பேராசியர் சந்தன அபேரட்ண கூறினார்.
தமது அரசாங்கம் பதவியேற்றப்பின்னர் கடந்த வருடங்களில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கியதாகவும் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாகவும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் இரத்தினபுரி தேர்தல் தொகுதி மாநாடு இரத்தினபுரி மாநகர சபை கேட்போர் கூடத்தில் (10) சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக பொது நிர்வாகம், மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பேராசியர் சந்தன அபேரட்ண கலந்துகொண்டார்.



பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக சேனரத்தின உள்ளிட்ட பெருந்திரளான புத்திஜீவிகளும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் அவர் தொடர்ந்து பேசுகையில்:
அரச ஊழியர்கள் தலை நமிர்ந்து வாழ வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு. அவர்கள் சுயமாக; சுதந்திரமாக பணிப்புரியும் பட்சத்தில் அவர்கள் மூலம் பொது மக்கள் சிறந்த பலனை அடைவார்கள்.
கடந்த 2020 முதல் எந்வொரு புதிய நியமனத்தையும் கடந்த கால அரசாங்கம் வழங்கவில்லை. இதனால் அரச திணைக்களங்கள்,அரச அலுவலகங்கள் பகுப்பாய்வுத் திணைக்களங்களில் இன்று முடிவுகளை எடுக்ககூடிய தகுதியான அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப முடியாதுள்ளது.
பகுப்பாய்வு திணைக்களங்களில் தகுதியுள்ள அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருள் குறித்து பகுப்பாய்வு செய்ய காலதாமதமாகின்றது.
இதனால் சந்தேக நபர்கள் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கவும் கால தாமதமாகின்றது.இதனால் சிறைச்சாலைகளில் சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.
எமது அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு 35 ஆயிரம் பேருக்கு அரச நியமனங்களை வழங்கியது. இவ்வருடம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அரச துறைகயில் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதனை தவிர 35 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. கூடிய விரைவில் இந்நியமனங்கள் வழங்கப்படும். இதற்கான போட்டிப்பரீட்சைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
கடந்தகால அரசாங்கங்கள் கொள்கைகள் இல்லாது பொது மக்களிடம் வரி அறவிட்டன. அதன் மூலம் பாரியளவு ஊழல் மோசடி செய்ததே தவிர நாட்டை முன்னேற்றவில்லை.
ஆனால் நாங்களும் பொது மக்களிடம் சீரான வரியை அறிவிட்டு நாட்டு மக்களுக்காக சேவைகளை செய்து வருகின்றோம்.
1990 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களே தற்போதும் அரச திணைக்களங்களில் காணப்படுகின்றன. அவசர தேவைகளின் போது அரச திணைக்களங்களின் தலைவர்களுக்கு வாகனங்கள் இல்லாத சூழ்நிலை காணப்படுகின்றது.
வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றோம்.
பொருளாதார ரீதியாக நாங்கள் பலமடைந்து வருகின்றோம் அதனால் எதிர்காலத்தில் இலங்கையில் பொருளாதார சிக்கல் நிலை காணப்படாது என நாம் உறுதி கூறுகின்றோம்.
பழுதடைந்த,சேதமடைந்த பணத் தாள்களுக்குப் பதிலாக புதிதாக தாள்கள் அச்சடிக்கப்பட்டதே தவிர, பணப்பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு நாம் பணம் அச்சடிக்கவில்லை.
நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கையொப்பமிட்ட 5000 ரூபாய் பெறுமதியான தாள்களை நீங்கள் எங்கேயும் கண்டதுண்டா?
எமது நாட்டின் மத்திய வங்கியில் பணம் இருக்கின்றது. இதற்குப் பிரதான காரணம் நாம் நேர்மையாக செயற்படுவதுடன் வீண் விரயங்கனைளத் தவிர்த்து வருகின்றோம்.
அத்துடன் பொது மக்களும் வர்த்தகர்களும் நியாயமான முறையில் தமது வரிகளைச் செலுத்தி வருவதனால் எமது மத்திய வங்கியில் பணம் இருக்கின்றது.
நாம் ஆட்சிக்கு வந்து எந்த அரச சொத்தையும் இதுவரை விற்பனை செய்யவில்லை. என்றார்.
எஸ். ஆர்.இரவீந்திரன் இரத்தினபுரி
