காணி உரிமை வழங்காமல் 6 குடும்பங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருப்பதாக நுவரெலியா ஐக்கிய எதிர்க் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காணி உரிமை வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு ஆறு குடும்பங்களை நடுவீதியில் அமர்த்தி உள்ளது அவர்கள் நேற்று (13) செய்தியாளர் சந்திப்பில் அரசைக் குற்றம் சாட்டினர்.
இராகலை மேதவத்தைப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஆறு குடும்பங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியிலிருந்து நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நுவரெலியா ஐக்கிய எதிர்க்கட்சியின் சிறுகட்சிகள் இணைந்து விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியன.
லெனாட்ஸ் மக்களுக்கு காணி உரிமை வழங்காமல் துரோகம்
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதாகத் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு, காணி உரிமை வழங்காமல் 6 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.
நீண்டகாலமாக வாழ்ந்து வந்த மக்களை நீதிமன்றத் தீர்ப்பின் பெயரில் வெளியேற்றும் நிலைக்கு தாழ்ந்துள்ளதா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த ஊடகச் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் ராதாகிருஷ்ணன் ராஜாராம், முன்னிலை சோசலிசக் கட்சியின் நுவரெலியா – வலப்பனை உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர் மொஹமட் இல்லியாஸ்,
புதிய ஜனநாயக மார்க்சிய–லெனினியக் கட்சியின் பொதுச் செயலாளர் வெத்தலிங்கம் மகேந்திரன், ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தர்மலிங்கம்,
ஹெல்பிங் ஹேன்ட் அமைப்பின் செயலாளர் தர்மலிங்கம் பாரதி ராஜா மற்றும் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணி மோகன் தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்தைச் சாடும் எதிரக்கட்சிகள்
இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய எதிர்க்கட்சியின் நுவரெலியா சிறுகட்சி பிரதிநிதிகளும் சட்டத்தரணியும் மேலும் தெரிவித்ததாவது:
“பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் சந்தித்தோம். அவர்கள் எதிர்நோக்கும் கடுமையான துன்பங்களை நாட்டிற்கு எடுத்துரைப்பதற்காகவே இன்றைய ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.
2019ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்தில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியில் ஆறு குடும்பங்கள் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி,
அவர்களை வெளியேற்றுவதற்காக வலப்பனை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில், சில நாட்களுக்கு முன்னரே வழங்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், அந்தக் காணிகளை மீண்டும் அதே மக்களுக்கே வழங்குவதற்கான அதிகாரம் காணி அமைச்சுக்கு உள்ளது. இதற்கு எந்தவிதமான சட்டத் தடையும் இல்லை.
வழக்கைத் தாக்கல் செய்தது முந்தைய அரசாக இருந்தாலும், தீர்ப்பு வழங்கப்பட்டது தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில்தான்.
காணி உரிமை வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு, வழக்கை வாபஸ் பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தீர்ப்புக்காகக் காத்திருந்தனர்.
தற்போது அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில், மக்களின் துயரத்தை உண்மையாகப் புரிந்துகொண்டு அவர்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இருந்தால்,
அந்தக் காணிகளை மீண்டும் அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
மெலும் படிக்க: வேளாண் துறையை ஜனாதிபதி ஏற்க வேண்டும்
நீதிமன்றத் தீர்ப்பை எவ்விதத்திலும் நாம் சவாலுக்கு உட்படுத்தவில்லை. அந்தத் தீர்ப்பு சட்டபூர்வமானது.
ஆனால் தற்போது அந்தக் காணிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றை மீள வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் காணி அமைச்சிடமே உள்ளது.
தற்போது அந்தக் குடும்பங்கள் பல்வேறு இடங்களில் தற்காலிக கூடாரங்களிலும் வாடகை அறைகளிலும், அடிப்படை சுகாதார வசதிகள்கூட இன்றி மிகவும் துயரமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு வேறு இடங்களில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் நீண்டகாலமாக வாழ்ந்த அதே காணிகளை மீண்டும் வழங்குவதே மிகவும் நியாயமானதும் நிலையானதுமான தீர்வாகும்.”
இவ்வாறு எதிர்க் கட்சியினர் தெரிவித்தனர்.
நுவரெலியா ஆர். எப். எம். சுஹைல்
