வடக்கிற்கான ரயில் சேவை இன்று (14) முதல் வழமைக்குத் திரும்புகிறது.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் முன்பு தீர்மானம் எடுத்திருந்தது.
அந்தத் தீர்மானத்தை மாற்றி, இன்று (14) முதல் வடக்கிற்கான ரயில் சேவை வழமை போல் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயிலின் சேவையை நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் தீர்மானித்திருந்தது.
மேலும் படிக்க: வேளாண் துறையை ஜனாதிபதி ஏற்க வேண்டும்
எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தன.
விடயங்களை கருத்திற்கொண்டு, இதற்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்த செவ்வாய், வியாழக்கிழமைகளிலும் இந்த நகராந்தர கடுகதி ரயிலை இன்று முதல் அமலுக்கு வரும் வகையில்
மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
