இலங்கை முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால், பல மருத்துவமனைகள் தமது நோயாளி அனுமதித் திறனை மீறிச் செயல்படும் நிலை உருவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கரா தெரிவித்ததாவது, “இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 35,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30% முதல் 40% வரை அதிகரிப்பாகும். சமீபத்தில் ஏற்பட்ட ‘தித்துவா’ புயல் நிலைமை, அதனால் ஏற்பட்ட கனமழை, இடைக்கிடை பெய்துவரும் மழை காரணமாக டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் டெங்கு நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். இதில், மொத்த நோயாளிகளில் 50% பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
80% நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, கண்டி ஆகிய 6 முக்கிய மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று (05) மேலும் ஒரு டெங்கு மரணம் பதிவானதைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 12 பெண்கள், 5 ஆண்கள், 3 சிறுவர்/சிறுமியர் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றி, கொசு பெருகும் இடங்களை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
எஸ். ஆர். இரவீந்திரன்
