அம்பகமுவை பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தலை தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை கினிகத்தேனை நகரம்,அதனை அண்டிய பகுதிகளில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந் நடவடிக்கையின்போது கினிகத்தேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிசார், பொதுச் சுகாதார அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் சுற்றுச்சூழல் அதிகாரி,உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கினிகத்தேனை நகரில் உள்ள பேருந்து நிலையம், பாடசாலை, வணக்க ஸ்தலங்கள், பொது இடங்கள், வர்த்தக நிறுவனங்கள் என்பன சோதனையிடப்பட்டு, டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து அம்பகமுவை பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தலை கருத்து தெரிவிக்கையில்:
அம்பகமுவை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இனி வரும் காலங்களில் பொது மக்கள் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும். நமக்குப் பின்னர் நமது சந்ததியினருக்கு சுத்தமான பிரதேசத்தை உருவாக்குவது எமது தலையாய கடமை.
அம்பகமுவை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள்- வட்டவளை, கினிகத்தேனை, நோட்டன், கலுகலை, லக்சபானை, பொல்பிட்டி, ஹங்கராம்பிட்டி, கிரிவன்னெலியா போன்ற பகுதிகள் அடங்கும்.
இப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் உக்காத பொருள்கள் குவிந்து வருகின்றன.அதன் காரணமாக இனி வரும் காலங்களில் எந்த ஒரு உக்காத பொருளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அவ்வாறு கொள்வனவு செய்ய பட்டுப் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள அனைத்து பொருள்களையும் பிரதேச சபையின் வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும கோரிக்கை விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர்





