இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் தமிழ் அரசியல் கட்சிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளன.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி – இந்திய வம்சாவளித் தமிழர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் விசேட சந்திப்பு
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய வம்சாவளித் தமிழர் (Indian-Origin Tamil – IOT) அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (05) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் (India House) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சந்திப்பின்போது, இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு அபிவிருத்தி முன்முயற்சிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்- பாராளுமன்ற உறுப்பினர் – ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான விடயங்களை இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.
மேலும், காணி உரிமை, மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணி உரிமை தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் காரணமாக காணி வழங்கும் விடயத்தில் சிக்கல் நிலவுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.
எனினும், சீரற்ற காலநிலை காரணமாக வட்டவளை, அக்கரகப்பத்தனை, நாவலப்பிட்டி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் தாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் முன்வைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பெ.கோபிநாத்
ஊடகச்செயலாளர்
ஜீவன் தொண்டமான் (பா.உ)
