பெண் பிள்ளையின் கன்னத்தைத் தொடுவது குற்றமா? என்று கேட்டால், பதில் ஆம் என்பதுதான்.
உணவு டெலிவரி செய்வதற்காக அரபு நாடொன்றில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றிருக்கிறார் ஒரு நபர்.
கதவை திறந்து வெளியே வந்த 7 வயது சிறுமி உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக் கொள்ள அந்த நபர் உணவுப் பொருளைக் கொடுத்து விட்டுச் செல்வதற்குப் பதிலாக எதேச்சையாக அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தடவியிருக்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக வெளியில் சென்றிருந்த குழந்தையின் தந்தை அங்கு வந்து விட இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அவர் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
சட்டத்தின் முன் இந்தச் செயலுக்கு நியாயம் கற்பிக்க முடியாது விளைவு அந்த நபருக்கு மூன்று வருடச் சிறைத் தண்டனை.
அரபு நாடுகளில் குழந்தைகள் உடல் வளர்ச்சியிலும், விழிப்புணர்விலும் நமது நாட்டுக் குழந்தைகளை விட முதிர்ச்சியுடன் காணப்படுவார்கள்.
வெளிநாட்டுச் சூழலில் வளரும் குழந்தைகள் மலை போல் உறுதியான விழிப்புணர்வுடனும், சட்டப் பாதுகாப்போடும் வளர்க்கப்படுகிறார்கள்.
இங்கே உள்ள குழந்தைகளுக்கு Good Touch மற்றும் Bad Touch பற்றிய விழிப்புணர்வு மிகச் சிறு வயதிலேயே பள்ளிகளிலும் வீடுகளிலும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு சங்கடத்தையோ, பயத்தையோ, அதிர்ச்சியையோ அல்லது அருவருப்பையோ தரக்கூடிய எந்தவொரு தொடுதலும் Bad Touch தான். எனவே பராயமடையாத பெண் பிள்ளையின் கன்னத்தைத் தொடுவது குற்றம்தான்.
சட்டத்தின் பார்வையில் பெற்றோர்களைத் தவிர வேறு எந்தவொரு அந்நிய நபரும் ஒரு பெண் குழந்தையின் உடலைத் தொடுவது கடுமையான குற்றமாகவும், ஆபத்தான தொடுதலாகவுமே பார்க்கப்படுகிறது.
7 வயது சிறுமியின் கன்னத்தைத் தடவுவதில் அந்த நபருக்குத் தீய எண்ணம் இருந்ததா இல்லையா என்பது விவாதிக்கப்பட வேண்டியதல்ல அங்கே சட்டத்திற்குத் தேவை எல்லை மீறப்பட்டதா இல்லையா என்பது மட்டுமே.
நாம் வெளிநாடு வந்தது எதற்காக நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது.
நாம் எதற்காக வெளிநாடு வந்தோம்..
நாம் இங்கு வந்திருப்பது அந்நியக் குழந்தைகளின் கன்னத்தைத் தடவுவதற்கோ அல்லது தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதற்கோ அல்ல.
நம்மை நம்பி ஊரில் இருக்கும் நமது சொந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக நமது உழைப்பை மூலதனமாக்கவே நாம் கடல் தாண்டி வந்துள்ளோம்.
ஒரு நொடி ஏற்படும் உணர்ச்சிவசப்படுதலோ அல்லது அறியாமையோ நம்மை பல வருட சிறைவாசத்திற்கோ அல்லது குடும்பத்தை நட்டாற்றில் தள்ளுவதற்கோ வழி கோலிவிடும்.
மத்திய கிழக்கின் சட்டங்கள் மற்றும் கலாச்சார விதிகள் மிகவும் கடுமையானவை.
குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் எந்தவொரு சமரசத்திற்கும் இடமளிக்காது.
பிறர் வீடுகளுக்கோ அல்லது வேலை செய்யும் இடங்களுக்கோ செல்லும் போது நமது கைகளும், செயல்களும் எல்லை மீறாமல் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

