அரசியலமைப்புத் திருத்தம் என்றால் என்ன? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் ஆராயவிருக்கின்றோம்.
ஒரு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கான அடிப்படை சட்டமே அரசியலமைப்பாகும்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரங்கள், நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், நீதித்துறை, தேர்தல் முறை, மக்களின் அடிப்படை உரிமைகள், மொழி மற்றும் மதம் தொடர்பான ஏற்பாடுகள், மத்திய அரசு–மாகாணங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அரசியலமைப்பில் வரையறுக்கப்படுகின்றன.
காலப்போக்கில் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ப, அரசியலமைப்பில் குறிப்பிட்ட பிரிவுகளை மாற்றுவதற்காக “அரசியலமைப்புத் திருத்தம்” கொண்டு வரப்படுகிறது.
இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பாக சுருக்கமான வரலாறு…
1948ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் Soulbury அரசியலமைப்பு நடைமுறையில் இருந்தது.
அதன்பின்னர் 1972 மே 22ஆம் திகதி முதலாவது குடியரசு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அது 1978ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
பின்னர் 1978 செப்டம்பர் 7ஆம் திகதி இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது. இதன் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன் பின்னர் 1978 அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உதாரணமாக:
🔹 13வது திருத்தம் – மாகாண சபைகள் முறைமை மற்றும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்புடைய முக்கியத் திருத்தம்.
🔹 16வது திருத்தம் – சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளின் நிர்வாகம், சட்டவாக்கம் மற்றும் நீதிமன்றப் பயன்பாடு தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
🔹 19வது, 20வது மற்றும் 21வது திருத்தங்கள் – ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்கள், அரசியலமைப்புச் சபை, அரச நிறுவனங்களின் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தின.
தற்போது 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விடயங்கள் நாடாளுமன்றத்தில் கவனத்திற்கு வந்துள்ள நிலையில், 2026 செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், அரசியலமைப்புத் திருத்தம் எவ்வாறு கொண்டுவரப்படுகிறது? அதில் மக்களுக்கு தொடர்புடைய முக்கிய விடயங்கள் என்ன? என்பது தொடர்பான அடுத்த பதிவில் மேலும் விரிவாகப் பார்க்கலாம்.
தொடரும்…

பெ.கோபிநாத்
