கேகாலை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர்கள் ஆகியோருடனான விசேட கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை (17/06/2026) நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடந்த இக்கலந்துரையாடலில், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுபினர்கள், மாவட்டச் செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்தனன், ஆன்மீகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலை கேகாலை மாவட்ட ஐயப்ப குரு சுவாமிகள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருதது.
இதில், மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள் எதிர்கொளும் காணி பிரச்சினைகள், நிதிப் பிரச்சினைகள்,நிர்வாக சவால்கள் குறித்து நிர்வாக சபையினர் தமது கருத்துகளை முன்வைத்தனர்.
ஆலயங்களைப் புனரமைத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் திருவிழாக் காலங்களில் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்,அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்தும் இங்குக் கலந்துரையாடப்பட்டது.
இளம் சந்ததியினருக்கு ஆன்மிக,ஒழுக்கக் கல்வியை வழங்கும் அறநெறிப் பாடசாலைகளின் தற்போதைய நிலை, ஆசிரியர் பற்றாக்குறை, பாடத்திட்டம்,உபகரண வசதிகள் குறித்து பொறுபாசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “ஆலயங்கள் வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல, அவை எமது கலாசார அடையாளம்,சமூக ஒற்றுமையின் மையங்கள். ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுடன், அறநெறி பாடசாலைகளை வலுபடுத்தி எமது பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செலவதே அரசின் கடமை” எனத் தெரிவித்தார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்தனன், ஆலய பதிவு,அபிவிருத்தி திட்டங்களுக்கான அரச உதவிகள் குறித்து விளக்கமளித்தார் .
கேகாலை மாவட்ட இந்து ஆலயங்களின் அபிவிருத்திக்கும் அறநெறிக் கல்வியை வலுப்படுத்துவதற்கும் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக செயற்படுத்தப்படும் எனப் பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
அத்தோடு கேகாலை மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள ஆலயங்கள் புனர் நிர்மாணப் பணிகளுக்கான நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.







