அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியை ஒட்டியதாக கம்பளை கல்வி வலய தமிழ் மொழித்தின போட்டிகள் அண்மையில் (மே 16-17)வெகு விமரிசையாக கம்பளை இந்துக் கல்லூரியில் நடைபெற்றன.
கம்பளை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர். விஜேந்திரனின் வழிகாட்டலில், கம்பளை இந்துக் கல்லூரி அதிபர் ஆர். பாலச்சந்திரனின் தலைமையில், கம்பளை கல்வி வலயத்தின் தமிழ் மொழிப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் திருமதி அ. சி. எழில்பிரியாவின் ஏற்பாட்டில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆர். விஜேந்திரன் உரையாற்றுகையில், இன்று இளம் சமூகத்தினரிடையே தமிழ் மொழியின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து வருகின்றதாகக் குறிப்பிட்டார்.
தமிழ் மொழித் தினப் போட்டிகளில் பங்கேற்பது, தமிழ் கலாசார நிகழ்வுகளில் இணைவது, தமிழின் ஆழத்தையும் பெருமையையும் அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் இளைஞர்களிடையே பின்னடைவு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வருவதால் இளம் தலைமுறை அதற்கு அடிமையாகி வருகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான காலகட்டத்தில் தமிழ் மொழித் தினப் போட்டிகள் மாணவர்களிடையே மொழிப்பற்று,கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன என்றும் கூறினார்.
எனவே, இத்தகைய போட்டிகளை மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடத்துவது காலத்தின் கட்டாயத் தேவையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்






