ஹைதராபாத்தில் இருந்து நேற்றுப் பிற்பகல் (19) ஹூப்ளிக்குச் சென்ற ஃப்ளை91 (Fly91) விமானம் (IC3401) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தரையிறங்க முடியாமல் சுமார் நான்கு மணித்தியாலம் நடுவானில் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பயணிகள் பெரும் பதற்றமடைந்து அச்சத்தில் கண்ணீர்மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் பிற்பகல் மூன்று மணிக்குப் புறப்பட்ட விமானம் மாலை 4.30 இற்கு ஹுப்ளியில் தரையிறங்க வேண்டியிருந்தது.
எனினும், தொழினுட்பக் கோளாற்றினால் இறங்க முடியவில்லை. பயணிகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே விமானத்தைச் சீர்செய்யும் முயற்சியை விமானிகளும் ஊழியர்களும் கைவிடவில்லை.
அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது. இருப்பினும், தரையிறங்குவதற்கு முன் முண்ட்கோட், தாவணகெரே, ஷிமோகா ஆகிய பகுதிகளுக்கு மேல் சுமார் 4 மணி நேரம் நடுவானில் வட்டமடித்தது.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு, விமானம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு 7.30 இற்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இந்த நீண்ட நேர அவசரநிலை காரணமாக, விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள், விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பில் தாமதம் இருந்ததாகக் கூறி கவலையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
